அசாம் மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 9 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்த வாய்ப்பு கை நழுவிப் போனது. எனவே, இந்த முறை நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் தீவிரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதே நேரத்தில், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் மும்மரமாகச் செயல்பட்டு வருகிறது. இதனால், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவின் மூத்த தலைவரும், தற்போதைய முதல்வருமான ஹிமந்த பிஷ்வா சர்மா, ஜலுபாரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், இந்த தொகுதி அசாம் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஜலுபாரி தொகுதி என்பது சர்மாவிற்குச் செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதி என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த தேர்தலில் செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சி வேட்பாளரை எதிர்த்து அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த தேர்தலில் இவரை எதிர்த்து அரசியலில் பெரிதும் அனுபவம் இல்லாத பெண் வேட்பாளரைக் காங்கிரஸ் களமிறக்கியிருக்கிறது. இது அசாம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் பிதிஷா நியாக், “சர்​மாவை எதிர்ப்​ப​தில் எனக்குப் பயமில்​லை. அசாம் மக்​கள் சகோ​தர, சகோ​தரி​களாக ஒற்றுமையுடன் வாழ விரும்​பு​கின்​றனர். அவர்கள், மாநிலத்தில் வளர்ச்சி​யையும், அமை​தியையும் விரும்​பு​கின்​றனர். அவர்​களு​டைய கனவை நிறைவேற்றப் பாடுபடு​வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
அரசியலில் முன் அனுபவம் இல்லை என்ற போதிலும், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்​பில் தீவிர​மாக ஈடுபட்டு வருகிறார் பிதிஷா. இதனால், இந்த தேர்தலில் சர்​மாவுக்​குத் கடும் போட்​டி​யாக பிதிஷா இருப்​பார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இருப்பினும், பிதிஷா கடந்த ஆண்டு தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
