அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பதாகவும், டெல்லி தலைமை இபிஎஸ்சை நெருக்குவதாகவும் பேசப்பட்ட நிலையில், அதிமுகவின் தலைமை அலுவலகத்துக்கு பாஜக, பாமக, அமமுக தலைவர்கள் வந்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளனர்.
இதன் மூலமாக அதிமுக அலுவலகத்துக்கு பாஜக தலைவர்கள் வருவதில்லை என்ற விமர்சனத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், எவ்வித சிக்கலுமின்றி தொகுதிப் பங்கீடும் இறுதி செய்யப்பட்டதாக அதிமுக கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக, பாமக, அமமுகவுக்கு மொத்தமாக 56 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 178 தொகுதிகளில், மற்ற கட்சிகளுக்கு 10 முதல் 13 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 2021-ல் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு கிட்டத்திட்ட நிறைவடைந்த நிலையில், அதிமுகவும் முக்கிய கட்சிகளுடனான ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், தேர்தல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
