வருடந்தோறும் பல அறிமுக இயக்குநர்கள் குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி, பளிச்சிடும் பட்டியலில் முன் நிற்பார்கள். எப்போதுமே, அறிமுக இயக்குநர்கள் முன் பல சவால்கள் நிறைந்திருக்கும். பட்ஜெட், கதை கேட்கும் நடிகர்கள் எனத் தொடங்கி பல சவால்கள் படப்பிடிப்பின் இறுதிவரை நீண்டுகொண்டே போகும்.

அப்படி கடந்தாண்டு பெரியளவில் நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் வெற்றிகரமான படத்தை அறிமுக இயக்குநர்கள் பலர் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் அடுத்தப் படத்தின் அப்டேட் என்ன? முதல் படம் எப்படியான கற்றல் அனுபவங்களை அவர்களுக்குத் தந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்தந்த இயக்குநர்களிடமே பேசினோம்.
‘ஜென்டில்வுமன்’ படத்தை முடித்த கையோடு அவருடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளில் களமிறங்கிவிட்டார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். விஜய் ஆண்டனியை கதாநாயகனாக வைத்து இவர் எடுத்திருக்கும் படத்திற்கு ‘லாயர்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.
இப்போது அப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இறுதிக்கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார். நம்மிடையே பேசியவர், “நேர்மையாக இருந்ததற்கான ரிசல்டும் ‘ஜெண்டில்வுமன்’ படத்தில் எனக்குக் கிடைத்தது. எனக்கு அப்படத்தினுடைய வரவேற்பு ஒரு தெளிவையும் கொடுத்திருக்குனு சொல்லலாம். அப்படம் ரிலீஸ் ஆனதும், விஜய் ஆண்டனி ‘உங்க படம் எனக்குப் பிடிச்சிருக்கு. உங்க ஸ்டைல்ல நம்ம ஒரு படம் பண்ணலாம்’னு சொல்ல உடனடியாக ‘லாயர்’ படம் தொடங்கிடுச்சு.
நான் முன்பே இந்தக் கதையில் வொர்க் பண்ணினதுனால, முதற்கட்டப் பணிகளுக்கு பெருசா நேரமெடுத்துக்கல. உடனடியாக படப்பிடிப்புக்குக் கிளம்பிட்டோம்.

படமும் நல்லபடியாக உருவாகியிருக்கு. இறுதிக்கட்ட வேலைகள் இப்போ மும்முரமாகப் போயிட்டு இருக்கு.” என்றவர், “நான் எப்படியான விஷயங்களை உறுதியாக சினிமாவில் பேசப்போறேன்னு ‘ஜெண்டில்வுமன்’தான் தெளிவைத் தந்தது. இப்படியான படங்களுக்கு மக்களின் ஆதரவு பெரியளவில் கிடைக்காதுனு சொல்வாங்க. ஆனா, அதையெல்லாம் உடைக்கிற மாதிரி மக்கள் தந்த வரவேற்பு எனக்குள்ள பெரும் நம்பிக்கையை விதைச்சிருக்கு.
இப்போ ‘லாயர்’ படமும் அழுத்தமான விஷயங்களைப் பேசுது. ரெண்டாவது படத்தின் வேலைகள் நடக்கும்போதே, என்னுடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளையும் தொடங்கிட்டேன். கூடிய விரைவில் அதனுடைய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வரும். அதுவும் மக்களுக்கான படைப்பாகதான் நிச்சயமாக இருக்கும். கலை யாவும் மக்களுக்கானதுனு நம்புகிறேன். அதனால, என்னுடைய குரல் மக்கள் நலன் சார்ந்து இருக்கும்.” என்றார்.
தமிழ் சினிமாவில் ஸ்லீப்பர் ஹிட் என சில படங்களின் வெற்றியைக் குறிப்பிடுவார்கள். அப்படி வெளியாகி மவுத் ஆஃப் டாக் மூலமாக பார்வையாளர்களை தியேட்டருக்கு ஈர்த்தது லெவன் படம். திரையரங்கத்தைத் தொடர்ந்து ஓடிடியிலும் படத்திற்கு நல்ல வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்திருந்தன.
இயக்குநர் லோகேஷ் (Lokkesh Ajls) பேசுகையில், “அடுத்தப் படத்திற்கான வேலைகளைத் தொடங்கிட்டேன். செப்டம்பர் அக்டோபர் மாதத்துல படப்பிடிப்புக்கு போகலாம்னு ப்ளான் பண்ணீட்டு இருக்கோம். பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்குதான் இப்படத்தை செய்கிறேன். ‘லெவன்’ டீசர் வெளிவந்ததும் இந்த தயாரிப்பு நிறுவனம் என்கிட்ட பேசினாங்க. படம் ரிலீஸ் ஆனதும் உடனடியாக வேலைகளைத் தொடங்கிட்டோம். ‘லெவன்’ ரிலீஸுக்குப் பிறகு பலரும் என்கிட்ட ஒரு த்ரில்லர் கதை பண்ணலாம்னு கேட்டாங்க. ஆனா, என்னுடைய விருப்பம் அதுவாக இல்ல. இப்போ ஒரு ஆக்ஷன் படத்துக்கான கதையை எழுதியிருக்கேன். கூடிய விரைவிலேயே முழு தகவல்களைச் சொல்றேன்.” எனப் பேசினார்.

மதுவுக்கு அடிமைப்பட்டிருக்கும் ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களின் கதை என அழுத்தமான கருத்தை ‘பாட்டில் ராதா’ படைப்பில் பேசியவர் இயக்குநர் தினகரன் சிவலிங்கம். அவருடைய அடுத்தப் படம் பற்றி நம்மிடையே பேசியவர், “‘பாட்டில் ராதா’ திரைக்கதையை எழுதும்போது, அதை ரொம்ப பர்சனலாகதான் பார்த்தேன். கமர்ஷியல், தியேட்டர் ஆடியன்ஸ்னு எதைப் பத்தியும் யோசிச்சது கிடையாது. ‘பாட்டில் ராதா’ ரிலீஸுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகே மீண்டும் நீலம் தயாரிப்பு நிறுவனத்திலேயே இன்னொரு படம் பண்றதுக்கு சைன் பண்ணீட்டேன். அந்தக் கதை எழுத்து வேலைகள்ல கொஞ்சம் நேரமெடுக்குது. நிறைய எமோஷன்ஸ் சார்ந்த காதல் கதை அது. 1 வருடம் கிட்ட எழுதிட்டிருக்கோம். கதை நல்லா வந்துட்டிருக்கு. ஜாலியான காமிக்கலான திரைப்படமாக இருக்கும்.” என்றார்.
‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அப்படத்தின் இயக்குநர் கார்த்திகேயன் மணியை தமிழ் சினிமா வட்டத்தினர் பலருக்கும் அறிமுகம் செய்தது. அப்படத்தின் ரிலீஸ் முடிந்த கையோடு அடுத்தப் படத்தின் வேலைகளைத் தொடங்கிவிட்டார். அடுத்ததாக ஒரு பீரியட் த்ரில்லர் செய்யவிருக்கிறாராம். அவரிடம் பேசும்போது, “‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் எனக்கு இனிமையான அனுபவம்னுதான் சொல்லணும். சின்னதாக செய்யலாம்னு தொடங்கப்பட்ட படமது. அக்கதையே இத்தனை நடிகர்களை தேர்வு செஞ்சுக்கொண்டு வந்ததுனு சொல்லலாம். இந்த இடங்களெல்லாம் ஆடியன்ஸுக்குப் பிடிக்குமானு சந்தேகத்தோட இருந்தேன்.

ஆனா, என்னுடைய எண்ணங்கள் தவறுனு மக்கள் சொல்லிக் கொடுத்திட்டாங்க. ஆடியன்ஸோட பல்ஸும் இந்தப் படத்தின் மூலமாக கத்துருக்கேன்னு சொல்லலாம். அப்படம் என்னை பல முன்னணி இயக்குநர்களுக்கும் பரிச்சயமாக்குச்சு. மாரி செல்வராஜ் சார், ராம் சார்னு பலரும் பாராட்டினாங்க. பாலாஜி சக்திவேல் சாருடைய ‘காதல்’ திரைப்படம்தான் என்னை சினிமாவுக்குள்ள கூட்டி வந்தது. பாலாஜி சக்திவேல் சார் இந்தப் படத்துக்காக என்னை பாராட்டியதையும் வெற்றியாகப் பார்க்கிறேன். அடுத்ததாக ஒரு பீரியட் த்ரில்லர் கதையில வொர்க் பண்ணீட்டு இருக்கேன். கூடிய விரைவில் அடுத்தடுத்த அப்டேட்ஸ் சொல்றேன்!” என புன்னகையோடு முடித்துக் கொண்டார்.
சர்வதேச திரைப்பட விழாக்கள் தொடங்கி பல இடங்களில் இயக்குநர் வர்ஷா பரத்துக்கு ‘பேட் கேர்ள்’ படம் பாராட்டுகளைப் பெற்றுத் தந்திருக்கிறது, தந்துகொண்டிருக்கிறது! ‘பேட் கேர்ள்’ படத்திற்குப் பிறகு அவருடைய அடுத்தப் படத்திற்கான எழுத்து வேலைகளை அவர் தொடங்கிவிட்டார். அடுத்த பட அப்டேட் கேட்க அவரிடமே பேசினோம். “‘பேட் கேர்ள்’ படத்துக்கு நேர்மறையான விமர்சனம் மக்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் எனக்குக் கிடைச்சது. ஆனா, கமர்ஷியலாக படம் பெரியளவில் போகவில்லை.
சினிமா என்பது பணம் படைக்கும் மீடியம்தான். அந்தப் படத்துக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிட்டேன். ரெண்டு, மூணு ஸ்க்ரிப்ட் வச்சிருக்கேன். அதுல ஒரு கதை என்னை ரொம்ப எக்ஸைட் செய்திருக்கு. எக்ஸைட் செய்யும் கதையைதான் என்னால் எழுத முடியும். அதனுடைய கதையை எழுதிட்டிருக்கேன். அதுவொரு வரலாற்றுப் படம்.” என்றார்.

பெரியளவில் பரிச்சயமில்லாத திரைக்கலைஞர்கள், நேரடி ஓடிடி ரிலீஸ் என பரீட்சார்த்த முயற்சியை கையிலெடுத்த ‘ஸ்டீபன்’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்திருந்தன. இப்படத்தின் இயக்குநர் மிதுன் பாலாஜியைத் தொடர்புகொண்டு அடுத்த பட அப்டேட் கேட்டோம். நம்மிடையே பேசியவர், “தமிழ் சினிமாவில் எங்களை பெரியளவில் கவனிக்காத மாதிரிதான் இருக்கு. தெலுங்கு, இந்தி பக்கமிருந்து படத்துக்கு பாராட்டுகள் கிடைச்சிருந்தது. தமிழில் சூர்யா சார் படத்தை பார்த்துட்டு பாராட்டி இருந்தார்.
அவரைத் தாண்டி நாங்க இன்ஸ்பிரேஷனாகப் பார்த்த பலருக்கு படம் வந்ததுக்கூட தெரியுமானு தெரியல. நாங்களும் தியேட்டர் ரிலீஸுக்கு ரொம்ப போராடினோம். பரிச்சயமான நடிகர்கள் இல்லாததுனால, எங்களால திரையரங்க ரிலீஸை சாத்தியப்படுத்த முடியல. ஆனா, ஓடிடி ரிலீஸ் படத்தை பிற மொழிகளுக்கும் கொண்டு சென்றிருக்கு. இப்போ சில சான்ஸ் வந்திருக்கு. அதை பொறுப்பாக பயன்படுத்திக்கணும்னு எழுதிட்டு இருக்கோம். நிறைய ஜானர்களிலும் பயணிக்கணும்னு ஆசையிருக்கு.
‘ஸ்டீபன்’ படத்தின் தொடர்ச்சி படமும் (அடுத்த பாகம்) தயாராகதான் இருக்கு. அதை நெட்ஃப்ளிக்ஸ் பண்றாங்க. அது பெரிய படம். அதுக்கு நேரமெடுக்கும். அடுத்தப் படமாகவும் வர்றதுக்கு வாய்ப்பிருக்கலாம். இல்லையெனில், அது பொறுமையாகவும் வரலாம். அதுக்கு முன்னாடி சில கதைகளை படமாகப் பண்றதுக்கு முயற்சி பண்ணீட்டிருக்கேன்.” என்றார்.

‘எமகாதகி’ படத்தின் மூலம் கடந்தாண்டு பேசப்பட்டவர் இயக்குநர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலன். அவருடைய அடுத்தப் படத்தின் அப்டேடை தெரிந்துக் கொள்ள அவரைத் தொடர்புக் கொண்டோம்.
அவர், “‘எமகாதகி’ படத்துக்கு ஓடிடி-யில நல்ல வரவேற்பு கிடைச்சது. எனக்கான அங்கீகாரத்தையும் அப்படைப்பு தேடி தந்தது. இனிமேலும் பொறுப்பாக செயல்படணும்னு அது எனக்கு சொல்லிக் கொடுத்தது. அடுத்தப் படத்துக்கான வேலைகளை மட்டும் தொடங்கிட்டேன். ‘எமகாதகி’ மாதிரியே ஒரு சமூகப் பொறுப்புள்ள ஒரு த்ரில்லர் கதையை எழுதிட்டிருக்கேன்.” எனப் பேசினார்.
இவர்களைப் போல, இன்னும் பல இயக்குநர்கள் கடந்தாண்டு அறிமுகமாகியிருந்தார்கள். அவர்களில் எந்த இயக்குநரின் அடுத்தப் படைப்பு பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவிடுங்கள். அடுத்த பாகத்தில் மீட் பண்ணலாம்!
