‘ஆனந்த விகடன்’ மற்றும் ‘டாக்டர் ஆர். கே. நீரிழிவு கால் மற்றும் பாத மருத்துவமனை’ இணைந்து நடத்திய ‘பாதமே நலமா’ சீசன்-2 விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (29.03.2026) சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 500-க்கும் மேற்பட்ட வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, வெறும் மருத்துவ முகாமாய் மட்டுமில்லாமல், ஒரு வாழ்வியல் வழிகாட்டியாகவும் அமைந்தது.
சர்க்கரை நோயும் ஹார்மோன்களும்: நிபுணர்கள் விளக்கம்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், எண்டோகிரைனாலஜி நிபுணர் டாக்டர் பிரசாந்த் ராவ் பேசுகையில், “எண்டோகிரைனாலஜி என்பது நம் உடலில் உள்ள ஹார்மோன்களைப் பற்றிப் படிப்பது. இன்சுலின் என்ற ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் குறைபாடு அல்லது அது வேலை செய்வதில் ஏற்படும் தடைகளால்தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோய் என்பது ஒரு ஹார்மோன் சார்ந்த நோய்தான்” என்று விளக்கினார்.
மேலும், இதற்கான சிறப்புப் படிப்பு முடித்த மருத்துவர்கள் தமிழகத்தில் குறைவு என்பதால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உயர் இரத்த அழுத்தம்: கவனிக்க வேண்டிய 4 காரணங்கள்
இதயத் துடிப்பு நிபுணர் டாக்டர் அருண் ரங்கநாதன், இன்று பலருக்கும் சவாலாக இருக்கும் இரத்த அழுத்தம் (B.P) குறித்துப் பேசினார்.
“சாதாரண இரத்த அழுத்தம் 120/80 இருக்க வேண்டும். தொடர்ந்து 140/90-க்கு மேல் இருந்தால் அது உயர் இரத்த அழுத்தம். இதற்கு உணவில் அதிகப்படியான உப்பு, உடல் பருமன், பரம்பரை காரணங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகிய நான்குமே முக்கிய காரணங்கள்.
தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மற்றும் 6 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் இருந்தால் இதை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்” என்றார்.
பாதப் பராமரிப்பும் இரத்த ஓட்டமும்
சிறுநீரக மற்றும் பாதப் பராமரிப்பு குறித்து டாக்டர் ஜெயநிவாஸ் பேசுகையில், “சர்க்கரை நோய் நீண்ட காலம் இருக்கும்போது நரம்புகள் பாதிக்கப்படுகின்றன (Peripheral Neuropathy). இதனால் கால்களில் உணர்ச்சி குறைவதோடு, இயற்கையான லூப்ரிகேஷனான வியர்வை சுரப்பதும் நின்றுவிடும்.
இதன் விளைவாக ஏற்படும் வெடிப்புகள் வழியாக பாக்டீரியாக்கள் நுழைந்து புண்களை உண்டாக்கும். எனவே, தினமும் கால்களுக்கு மாய்ஸ்சரைசிங் கிரீம் போடுவது மிக அவசியம்” என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, டாக்டர் கிருஷ்ணா வேரிகோஸ் வெயின்ஸ் மற்றும் இரத்த ஓட்டம் குறித்துப் பேசுகையில், “கால்களில் உள்ள சிரைகள் (Veins) வீங்குவதையே வேரிகோஸ் வெயின்ஸ் என்கிறோம். கால்களில் ரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க ‘ஆஞ்சியோ’ பரிசோதனை செய்வது அவசியம்.
காலில் 40 சதவீத இரத்தக் குழாய் அடைப்பு இருந்தாலே, அது இதயம் அல்லது மூளையையும் பாதித்திருக்க வாய்ப்பு அதிகம்” என்று எச்சரித்தார்.
“நமக்கு நாமேதான் டாக்டர்!” – பாரதி பாஸ்கரின் கலகலப்பான விழிப்புணர்வுப் பேச்சு
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள், தனதுக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடனும், அதே சமயம் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உரையாற்றினார்.
“முதலில் இந்த நிகழ்வை இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்த விகடன் குழுமத்திற்கும், டாக்டர் ராஜேஷ் அவர்களுக்கும் என் நன்றிகள். மேடையில் இருக்கும் மருத்துவர்கள் இவ்வளவு பொறுமையாக ஆடியன்ஸ் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

பொதுவாக ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்குப் போனால், நாம் வாயைத் திறப்பதற்குள்ளேயே அடுத்த டெஸ்ட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால், இங்கே எல்லா சந்தேகங்களுக்கும் மிக நிதானமாக விளக்கம் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு வீட்டில் பெண்கள் தங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்வதே இல்லை. காலையில் இருந்து இரவு வரை குடும்பத்திற்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சரியாகச் சாப்பிடுகிறார்களா அல்லது நடைப்பயிற்சி செய்கிறார்களா என்றால் இல்லை.

விமானத்தில் விபத்து நேரும்போது பக்கத்திலிருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் மாஸ்க் போடுவதற்கு முன் உங்களுக்குப் போட்டுக் கொள்ளச் சொல்வார்கள்; அதுபோலத்தான் வாழ்க்கையிலும்! நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குடும்பத்தைக் கவனிக்க முடியும், எனவே முதலில் உங்களுக்காக வாழுங்கள்.
நாம் எப்போதும் முகம் மற்றும் உடல் எடைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் பாதங்களுக்குக் கொடுப்பதில்லை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பாதப் பராமரிப்பு என்பது மிக முக்கியம். வலி என்பது உடலின் ஒரு பாதுகாப்பு அரண்; அந்த உணர்வு குறையும்போதுதான் ஆபத்து அதிகரிக்கிறது.

நம் உடல் என்னும் கோட்டைக்கு பாதமே அடிப்படை!
வள்ளுவர் சொன்னது போல, முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து உண்டால் மருந்து தேவையில்லை. ஆனால், நாம் இன்று ‘மிட்-நைட் பிரியாணி’ சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அத்தனையிலும் கூட்டம் வழிகிறது!
வாட்ஸ்அப் வழியாக வரும் தவறான மருத்துவக் குறிப்புகளை நம்பாதீர்கள். தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்வது போன்ற தகவல்கள் அனைவருக்கும் பொருந்தாது; மருத்துவர் சொல்வதை மட்டும் பின்பற்றுங்கள். கடைசியாக வழங்கப்பட்ட இந்த ‘ஃபுட் கேர் கிட்’ போன்ற பயனுள்ள பொருட்களை நாமாகச் சென்று கடையில்கூட வாங்க மாட்டோம்; இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்
ஆரோக்கியத்தைப் பேணுவது என்பது நமக்காக மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களுக்காகவும் நாம் செய்யும் கடமை என்பதை அவர் வலியுறுத்திய விதம் வாசகர்களை நெகிழச் செய்தது.
உணவு முறையும் வாழ்க்கை மாற்றமும்
உணவு முறை குறித்து மருத்துவர்கள் வழங்கிய சில முக்கிய ஆலோசனைகள்:
பழைய சோறு: “ப்ரோபயாடிக்ஸின் ராஜா நம் ஊர் பழைய சோறுதான். இது குடல் ஆரோக்கியம் முதல் இதயப் பாதுகாப்பு வரை அனைத்திற்கும் சிறந்தது” – டாக்டர் அருண் ரங்கநாதன்.
புரதச் சத்து: “ஒரு கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரதம் தேவை. உணவைச் சாப்பிடும்போது முதலில் புரதம் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டுவிட்டு, கடைசியாகச் சோறு சாப்பிடுவது சர்க்கரை அளவைச் சீராக வைக்கும்” – டாக்டர் ஜெயநிவாஸ்.




இரவு உணவு: “இரவு உணவை 7:30 அல்லது 8 மணிக்குள் முடித்துவிட வேண்டும். நள்ளிரவு பிரியாணி சாப்பிடுவது மிகத் தவறான பழக்கம்” – டாக்டர் அருண் & டாக்டர் ஈஸ்வர்.
வாசகர்களின் நேரடி அனுபவங்கள்
“என் கணவர் ஆர்.கே. டயாபிடிக் சென்டரில் சிகிச்சை எடுத்து வருகிறார். நீண்ட நாட்களாகத் தொடரும் இந்த சிகிச்சையில் அடுத்த கட்ட முன்னேற்றம் என்ன, வேறு ஏதேனும் மருத்துவ ஆலோசனைகள் கிடைக்குமா என்று பார்க்க வந்தேன். ஆனால், இந்த நிகழ்ச்சி சர்க்கரை நோய் மற்றும் பாதம் சார்ந்த பிரச்னைகளைத் தாண்டி, இன்னும் பல பயனுள்ள தகவல்களை எங்களுக்கு வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று ஷெனாய் நகரைச் சேர்ந்த கீதா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து அம்பத்தூரைச் சேர்ந்த கௌரி பிரசன்னா மற்றும் சம்பத் குமார் பேசுகையில், “நாங்கள் அம்பத்தூர் கருக்குப் பகுதியிலிருந்து வருகிறோம். விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தைப் பார்த்துவிட்டு, பாதம் பற்றித் தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று வந்தோம்.
சாதாரண இல்லத்தரசிகளுக்குக் கூடப் புரியும் வகையில் மருத்துவர்கள் நகைச்சுவையுடனும் தெளிவாகவும் விளக்கமளித்தனர். திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சும் எங்களைச் சிந்திக்க வைத்தது. கடைசியாக அவர்கள் வழங்கிய ‘கிட்’ (Kit) எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற பொருட்களை நாமாகச் சென்று கடையில்கூட வாங்க மாட்டோம்; இப்போது அதைப் பயன்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றனர்.

பெரம்பூரைச் சேர்ந்த பிரேமா பாய் கூறுகையில், “ஃபேஸ்புக் பார்த்துவிட்டுப் பெரம்பூரிலிருந்து வந்தேன். நீரிழிவு நோயாளிகள் பலரும் பாதத்தை முறையாகக் கவனிப்பதில்லை. அதற்கான ஒரு விழிப்புணர்வு கருத்தரங்காக இது அமைந்தது.
மற்ற நோய்கள் குறித்தும் மருத்துவர்கள் பகிர்ந்த கருத்துக்கள் எனக்குப் புதிய புரிதலைத் தந்துள்ளன” என்றார்.
இறுதியாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பரமசிவம், “சர்க்கரை நோய் குறித்து ஏற்கனவே இருந்த பயம் நீங்கி, அதை எப்படிக் கையாள்வது என்ற தெளிவு இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்தது” என்றார்.
இந்த நிகழ்வு, சர்க்கரை நோய் குறித்த பயத்தை நீக்கி, அதை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வாசகர்களிடம் விதைத்துள்ளது
