இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பலுாச் விடுதலைப் படையினரை எதிர்த்து போராடுவதில் பாதுகாப்பு படைகள் செயலிழந்துவிட்டது உண்மைதான் என, அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி, அங்கு பலுாச் இன மக்கள் போராடி வருகின்றனர்.
அவர்களின் ஆயுதக்குழுவான பி.எல்.ஏ., எனப்படும் பலுாச் விடுதலைப் படையினர், அரசுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பலுசிஸ்தானில், ஒரே நேரத்தில் 12 இடங்களில் பி.எல்.ஏ., வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், 200க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு போலீசும் ராணுவமும் இணைந்து பதிலடி கொடுத்தன. பி.எல்.ஏ., வீரர்கள் 177 பேரை கொன்றதாக பாதுகாப்பு படை தெரிவித்தது. இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில், பொதுமக்களில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாக்., பார்லிமென்டில் பேசிய ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், பலுசிஸ்தான் விடுதலைப் போராட்ட வீரர்களை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து விளக்கினார்.
அவர் கூறியுள்ளதாவது:
பலுசிஸ்தான் மாகாணம் பாகிஸ்தானின் மொத்த பரப்பளவில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கியது என்பதால், அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
அங்கு பெருமளவு படைகளை நிறுத்த வேண்டியுள்ளது. பரந்த பாலைவனங்கள், மலைகள் நிறைந்த பகுதி என்பதால் படைகள் மிகவும் சிரமப்படுகின்றன.
ராணுவத்தை விட மேம்பட்ட ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் உள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பொதுமக்களை கொன்ற பயங்கரவாதிகளுடன் அரசு எந்த பேச்சும் நடத்த தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
