பாதை மாறும் பும்ரா * ஒருநாள் போட்டிகளில் கவனம்

புதுடில்லி: உலக கோப்பை தொடருக்கு (50 ஓவர்) தயாராகும் வகையில், பும்ராவின் பாதை, ஒருநாள் போட்டிகள் பக்கம் திரும்பியுள்ளது.

இந்திய ‘டி-20’ அணி அடுத்து ஜப்பானில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டில் (வரும் செப். 19-அக். 4), சூர்யகுமார் தலைமையில் பங்கேற்க உள்ளது. அடுத்து, இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள், 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக்கில் (‘டி-20’) பங்கேற்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

எனினும், வரும் 2027, அக்டோபர்-நவம்பரில் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு, இந்திய அணி நிர்வாகம் அதிக முன்னுரிமை தரலாம்.

இதனால், மார்ச்-மே மாதம் நடக்க உள்ள பிரிமியர் தொடர் முடிந்த பின், 2027 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் பணி துவங்கும். சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில், பும்ரா இடம் பெற வேண்டும் எனில், அவரது பணிச்சுமை குறைக்கப்பட வேண்டும்.

மீண்டும் ஒருநாள்

கடந்த 2023 உலக கோப்பை (ஒருநாள்) பைனலுக்குப் பின் இதுவரை பும்ரா, ஒருமுறை கூட ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. மாறாக 21 டெஸ்ட், 21 ‘டி-20’ என 42 போட்டியில் பங்கேற்றுள்ளார். இதுபோல, அடுத்த 18 மாதங்கள் பும்ரா ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடலாம்.

இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் வெளியான செய்தியில்,’ஐ.சி.சி., தொடர்களில் பும்ராவின் ‘பிட்னஸ்’ மிக முக்கியம். இதற்கேற்ப அணி நிர்வாகம் திட்டமிட்டு, அவரது பணிச்சுமையை குறைத்து வருகிறது. 2027 உலக கோப்பை தொடரை முன்னிட்டு, இவர், அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கலாம். இந்திய அணி குறைந்தது 30 முதல் 35 போட்டிகளில் பங்கேற்க உள்ளது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link