இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாள்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் (நேற்று) புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து இருதரப்பும் வாதங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் பாமகவின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்திருக்கிறது. சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
