தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானுார்பட்டி கிராமத்தில், ‘ஸ்டார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்’ என்ற பெயரில், மாட்டு வண்டிகளை தயாரித்து விற்பனை செய்யும் இமானுவேல், 34:
விவசாயம் தான், எங்கள் குடும்பத்தின் முதன்மையான வாழ்வாதாரம். என் அப்பா, 1984ல் இந்த பட்டறையை துவக்கினார்.
விவசாயம் தொடர்பான போக்குவரத்துக்கு, மாட்டு வண்டியைத் தான் அவர் பயன்படுத்தினார். அந்தக் காலத்தில், முழுக்க முழுக்க வாகை மரத்தில் தான் மாட்டு வண்டிகள் செய்தனர். அவை, உறுதியானவை; நீண்ட காலம் உழைக்கும்.
நாகரிகம் வளர்ந்ததால், டயர் மாட்டு வண்டிகள் அறிமுகம் ஆகின. வாகை மரத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாடும், டயர் மாட்டு வண்டிகள் பெருகியதற்கு ஒரு காரணம்.
என் அப்பா, 2015ல் இறந்து விட்டார். நான் படிப்பு முடித்ததும், பட்டறையை கவனிக்க ஆரம்பித்தேன். அப்பா, 1990களில் ஆண்டுக்கு, 100 மாட்டு வண்டிகள் தயாரித்து விற்பனை செய்தார். அப்போது ஒரு மாட்டு வண்டியின் விலை, 6,000 ரூபாய்.
இப்போது எங்கள் பட்டறையில் ஆண்டுக்கு, 10 மாட்டு வண்டிகள் வரை தான் தயார் செய்து வருகிறோம்; ஒரு வண்டியின் விலை, 1 லட்சம் ரூபாய்.
மாட்டு வண்டி தயாரிப்பை மட்டுமே நம்பியிருந்தால், போதுமான வருமானம் ஈட்ட முடியாது என்பதால், விவசாய கருவிகளையும் தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். ஒரு வண்டிக்கு 6,000 -7,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
இதே ஊரில், ‘ஞானம் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயரில் டயர் பட்டறை நடத்தி வரும் அருள் இருதயம்: நான் பொறியியல் பட்டதாரி. என் அப்பா, 1996ல் இந்த பட்டறையை துவக்கினார்; கட்டை வண்டி, டயர் வண்டி இரண்டுமே செய்து வந்தார்.
நான் படிப்பை முடித்ததும், ஒரு கார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். விடுமுறை நாட்களில் அப்பாவுக்கு உதவியாக இருந்தேன்.
ஒரு கட்டத்தில் நான் பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, இந்த தொழிலில் இறங்கினேன். தொழிலில் முழு நேரமும் க வனம் செலுத்தி, காலத்துக்கேற்ப சில மாற்றங்கள் செய்தேன்.
அதாவது, நாங்கள் தயாரிக்கும் டயர் வண்டியில் மாடுகள் கட்டி, முழு நேரமும் உழவு ஓட்டலாம். விவசாய பொருட்களை சேகரித்து எடுத்து வந்து வேறிடத்தில் கொட்டும் டிப்பர்களாகவும் டயர் வண்டியை பயன்படுத்தலாம். அதற்கு ஏற்ற மாதிரியான வடிவமைப்புகளை செய்து இருக்கிறேன்.
எங்கள் பட்டறையில் தற்போது ஐந்து பேர் பணியாற்றுகின்றனர். சொந்தமாக தொழில் செய்கிறேன் என்ற நிம்மதியுடன், பாரம்பரியம் சார்ந்த தொழிலில் ஈடுபடுகிறோம் என்று ஓர் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது!
தொடர்புக்கு:
இமானுவேல்: 90475 84778
அருள் இருதயம்: 96007 25730
