பாரீஸ்: ஈரான் போர் பாதிப்பு எதிரொலியாக, 400 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உலக சந்தையில் விடுவிக்க சர்வதேச

பாரீஸ்: ஈரான் போர் பாதிப்பு எதிரொலியாக, 400 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உலக சந்தையில் விடுவிக்க சர்வதேச எரிசக்தி அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ளன.

ஈரானை, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தொடர்ந்து தாக்கி வருவதால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் வினியோகம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சர்வதேச அளவில் 115 அமெரிக்க டாலர்களை கடந்துவிட்டது. விலை மேலும் உயரக்கூடும் என்ற நிலையில் இதுகுறித்து சர்வதேச எரிசக்தி அமைப்பு இன்று கூடி அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன.

பின்னர், தற்போதுள்ள சூழல் குறித்து விவாதித்த உறுப்பு நாடுகள், 400 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உலக சந்தையில் விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளன. இதுகுறித்து அமைப்பின் இயக்குநர் பாத்தி பிரோல் கூறுகையில், ‘அமைப்பில் உள்ள ஒட்டு மொத்த உறுப்பு நாடுகளின் வசம் தற்போது 1.2 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பில் இருக்கிறது. பெர்சியா வளைகுடாவில் இருந்து வினியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டாலும் கூட, 124 நாட்களுக்கு தட்டுபாடின்றி சமாளிக்க போதுமானதாக இருக்கும்’ என்றார்.

சர்வதேச எரிசக்தி அமைப்பில் இதுபோல் ஒருங்கிணைந்து முடிவு எடுப்பது இது 6வது முறையாகும். கடந்த காலங்களில் 1991, 2005, 2011 மற்றும் 2022ல் இரு முறை என மொத்தம் 5 முறை இதேபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

Source link