பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடகத் தளத்தின் அலுவலகங்களில் பாரிஸ் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடகத் தளத்தின் அலுவலகங்கள் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 3) பாலியல் துஷ்பிரயோகம், டீப்பேக் வடிவத்தில் உள்ள குழந்தைப் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் பரப்பப்பட்டது உள்ளிட்ட தொடர் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஒரு ஆரம்பகட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, பாரீஸ் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் சைபர் கிரைம் பிரிவு, பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள், ஐரோப்பிய யூனியன் போலீஸ் அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக பாரிஸ் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
2025 ஜனவரியில் தொடங்கப்பட்ட ஒரு விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது. சிறுவர் தொடர்பான துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் டீப்பேக் போன்ற சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தத் தவறியது, க்ரோக் ஏஐ,சாட்போட் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுகிறத.
இந்த விசாரணைக்கு பாரிஸ் போலீஸ் குற்றப் பிரிவு தலைமை தாங்குகிறது.
பாலியல் ரீதியாகத் தூண்டும் டீப்பேக்குகளை உருவாக்குவதிலும் பரப்புவதிலும் ஏதேனும் ‘கூட்டுச் சதி’ இருந்ததா என்பது குறித்தும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மறுத்தது குறித்தும், மேலும் பிற குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு பாரிஸ் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
