புதுடில்லி: பார்லிமென்டுக்கு வரும் எம்.பி.,க்கள், நன்றாக ‘டிரஸ்’ செய்து வருவர். ஆனால், இதில் அனைவரது கவனத்தை ஈர்ப்பது பெண் எம்.பி.,க்களின் டிரஸ் தான். லோக்சபாவில் 74 பேர், ராஜ்யசபாவில் 42 பேர் என, மொத்தம் 116 பெண் எம்.பி.,க்கள் பார்லி.,யில் உள்ளனர். இதில், பெண் எம்.பி.,க்கள் பலரும் புடவை அணிந்து தான் வருகின்றனர்.
தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில், அழகாக உடையணிந்து வருபவர்களில் முதலிடம் பெறுபவர் நடிகையும், பா.ஜ., – எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் என்கின்றனர். இவர், காலையில் ஒரு புடவை, மாலையில் ஒரு புடவை. தவிர, ஒருமுறை கட்டிய புடவையை மறுமுறை கட்டுவதில்லையாம்.
சக எம்.பி.,க்கள் கங்கனாவின் உடையை புகழ்ந்து தள்ளுகின்றனர். இவருக்கு அடுத்தபடியாக வருபவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., – எம்.பி., மஹுவா மொய்த்ரா. இவரும் கங்கனாவிற்கு போட்டியாக உடை அணிந்து வருகிறார்.
இதையடுத்து, நம் ஊர் எம்.பி.,க்கள் கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோருடைய புடவைகள், சக பெண் எம்.பி.,க்களிடையே புகழ் பெற்றுள்ளன. பா.ஜ., – எம்.பி., ஹேமமாலினியும், ‘கலர்புல்’ புடவையில் வருகிறார். பார்லி.,யில் செய்தி சேகரிக்கும் இளம் பெண் நிருபர்கள், கங்கனாவிடம், ‘நீங்கள் உடுத்தும் புடவைகள் எங்கு வாங்கப்பட்டன?’ என கேட்கின்றனர்.
அத்துடன், அவரது புடவை தொடர்பாக, ஹிந்தி சேனல்களில் செய்தியும் வர ஆரம்பித்துள்ளது. இதையெல்லாம் பார்த்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘பார்லி.,யில் ஒரு, ‘பேஷன் ஷோ’வே நடத்தலாம் போலிருக்கிறதே’ எனக் கூறினாராம்.
