-நமது நிருபர்-
டில்லியில் இன்று (ஏப்ரல் 11) பார்லி வளாகத்தில் பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் நேருக்கு நேர் சந்தித்தனர். ஒரு சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இந்தியாவின் மகத்தான சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவரான மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது 200வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று தொடங்கவிருப்பதால், இந்நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த, 1827ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் மகாத்மா புலே பிறந்தார். தலைசிறந்த சீர்திருத்தவாதி என்பதைக் கடந்து, மகாத்மா புலேவின் வாழ்க்கை துணிவு, இடைவிடாத தேடல் மற்றும் சமூக நலனுக்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நிறைந்திருந்தது.
இந்நிலையில் இன்று ஜோதிராவ் புலே பிறந்த தினம் முன்னிட்டு டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபிஆர், பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
கலந்துரையாடல்
முன்னதாக பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள ஜோதிபா புலேவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுடன் கலந்துரையாடினர். பிரதமர் மோடியை ராகுல் வரவேற்கிறார். பிறகு ராகுலுடன் மோடி சிறிது நேரம் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.
