​பாலக்காடு: கேரள மாநிலம், சொரனூரில் தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய வழக்கில், கூலிப்படையை ஏவியது

​பாலக்காடு: கேரள மாநிலம், சொரனூரில் தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய வழக்கில், கூலிப்படையை ஏவியது அவருடைய பெரியப்பா மகன் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், வண்டூர் பகுதியைச் சேர்ந்தவரும், சரக்கு போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் வணிகம் செய்பவர் முகம்மது அலி, 72. கடந்த, 2025, டிச. 6ம் தேதி ஒரு கும்பல் இவருடைய காரை வழிமறித்து, துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய முகம்மது அலியை ஒற்றப்பாலம் கோதகுறுச்சி பகுதியில் மக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த அவர் பல நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சொரனூர் டி.எஸ்.பி ரவிக்குமார் தலைமையிலான போலீசார், சம்பவத்தன்று ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், முகம்மது அலியின் நெருங்கிய உறவினரான ஸியாஸ், 54, என்பவருக்கு இதில் தொடர்பிருப்பது உறுதியானது.

விசாரணை தன்னை நோக்கித் திரும்புவதை அறிந்த ஸியாஸ், வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லவும் ஆதாரங்களை அழிக்கவும் முயன்றார். இந்நிலையில், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் தலைமையிலான தனிப்படை, மலப்புரம் எடவண்ணாவில் ஸியாஸை நேற்று கைது செய்தது.

போலீசார் கூறியதாவது:

முகம்மது அலியின் நம்பிக்கைக்குரியவராகவும், அவருடைய தொழில்களைக் கவனித்து வருபவராகவும் ஸியாஸ் இருந்துள்ளார். ஆனால், சில காரணங்களால் அவரை அந்தப் பொறுப்புகளிலிருந்து முகம்மது அலி நீக்கியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதமே இந்தக் கடத்தலுக்கு முக்கியக் காரணம். ​கைது செய்யப்பட்ட ஸியாஸ் ஒற்றப்பாலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வாறு, கூறினர்.

Source link