பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், கூற்றநாடு தொழுக்காடு பகுதியைச் சேர்ந்த சுதீர் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த 13ம் தேதி, ஆமக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலமாரியில் வைத்திருந்த, 25 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர்.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், திருடர்கள் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஷிம், 45, மனோஜ், 49, ஆகியோர் என்பதும், அவர்கள் காசர்கோடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், நேற்று அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்த திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர்.
சொரனூர் டி.எஸ்.பி., சாஜு ஆபிரகாம் கூறுகையில், ”கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே, 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர்கள் ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களை பட்டியலிட்டு, மக்கள் திருவிழாவுக்கு சென்ற நேரத்தில், வீட்டினுள் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்,” என்றார்.
