பால் விற்பனையாளர்களுக்கு உரிமம் கட்டாயம் உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி

புதுடில்லி:பால் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள், நிறுவனங்கள் கட்டாயம் உரிமம் அல்லது பதிவு செய்யப்பட்ட சான்றிதழை பெற வேண்டும் என்று, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திராவில் கலப்பட பால் அருந்தியவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., இதை தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவித்துள்ளதாவது:

சமீப காலமாக பாலில் கலப்படம் செய்வது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து நிறைய புகார்கள் வருகின்றன. அமைப்புசாரா பால் வினியோகஸ்தர்கள், முறையாக பதிவு செய்யப்படாத சிறு, குறு பால் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களால் இந்த கலப்பட பால் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், பால் விற்பனை செய்யும் அனைவரும், அதாவது பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள், பால் விற்பனை செய்ய கட்டாயம் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் அல்லது உரிமம் பெற வேண்டும்.

மாநிலங்களில் உள்ள எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அதிகாரிகள் பால் விற்பனையாளர்களை கண்காணித்து, முறையாக பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெற்றுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பால் விற்பனையாளர் உரிமம் மற்றும் சான்றிதழ் வாங்குவது குறித்து மாநில அரசுகள் முகாம்களை நடத்த வேண்டும்.

பால் பதப்படுத்தும் மற்றும் குளிரூட்டும் இயந்திரங்களை சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link