சண்டிகர்: சண்டிகரில் உள்ள பஞ்சாப் பா.ஜ., தலைமை அலுவலகத்தின் வெளியே குண்டு வீசப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் பாகிஸ்தான் உளவுபிரிவுக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைநகரான சண்டிகரின் செக்டார் 37 பகுதியில், பஞ்சாப் மாநில பா.ஜ., தலைமையகம் இயங்கி வருகிறது. கடந்த 1ம் தேதி, மாலை, இந்த அலுவலகத்தின் வெளியே குண்டுவெடித்ததை போன்ற பயங்கர சத்தம் கேட்டது. மாநில தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில், பா.ஜ., அலுவலகம் வாசல் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், அலுவலகம் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் முற்றிலும் சேதமடைந்தது.
இதையடுத்து, பஞ்சாப் மற்றும் சண்டிகர் போலீசாரின் உளவுப் பிரிவினர் குண்டுவீச்சு குறித்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து இந்த குண்டுவீச்சு சம்பவத்தை ஒருங்கிணைத்த போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த ஏழு பேர் அடங்கிய குழுவிற்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ., ஆதரவு அளித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருக்குமோ என சந்தேகித்துள்ள போலீசார், அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட ஒரு பெரிய பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
