பா.ஜ.,விடம் மனசாட்சியை அடகு வைத்த பழனிசாமி: ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: “தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை காப்பாற்றிட, சிறுபான்மையின மக்களும், பெரும்பான்மையின மக்களும் சகோதரர்களாக வாழ வேண்டும்; அதற்கு முஸ்லிம்கள் அனைவரின் ஒற்றுமை, எந்நாளும் தொடர வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது: தி.மு.க.,விற்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உறவு, தி.மு.க., துவங்கிய நாளிலிருந்து ஏற்பட்ட உறவு. இந்த உறவு காலம் காலமாக தொடரும். நம் உறவை யாராலும் ஒரு நாளும் பிரிக்க முடியாது.

தி.மு.க.,வின் பலமே பெண்கள் தான். மகளிர் நலனை முன்வைத்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. முஸ்லிம் சமுதாய பெண்கள் நம்மோடு இருக்கும்போது, இன்னும் பல மடங்கு பலம் பெருகிவிடும்.

இந்த மேடையில், அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் ஒன்றாக இருக்கின்றன. இந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது தி.மு.க., தான். நாடு முழுதும், சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறை குறித்து பழனிசாமி கருத்து கூட சொல்லவில்லை.

அ.தி.மு.க., என்ற கட்சியுடன் சேர்த்து, அவரது மனசாட்சியையும் பா.ஜ.,விடம் அடகு வைத்ததுதான் வேதனையாக இருக்கிறது. சிறுபான்மையினர் மீதான வெறுப்பை துாண்டிவிட்டு, அதில் குளிர் காய்பவர்களுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருந்தால், எப்படி சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட முடியும்?

பழனிசாமி மட்டுமல்ல, அவரைப் போன்ற பலரும் நோன்பு திறக்கிற ஒரு நாள் மட்டும் பங்கேற்று விட்டு, முஸ்லிம்களுக்கு இன்னல் ஏற்படும் போது ஓடி ஒளிந்து விடுகின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Source link