பா.ஜ.,வின் குற்றப்பத்திரிகைக்கு திரிணமுல் காங்கிரஸ் பதிலடி

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக பா.ஜ., வெளியிட்ட குற்றப்பத்திரிகைக்கு ஆளும் திரிணமுல் காங்., பதிலடி கொடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

தொடர்ந்து, 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் உள்ள மம்தா, நான்காவது வெற்றியை எதிர்பார்த்துள்ளார். முதல் வெற்றியை நோக்கி பா.ஜ., பயணிக்கிறது.

தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சியை விவரிக்கும் வகையில், 14 முக்கிய குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை, கொல்கட்டாவில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று வெளியிட்டார்.

ஊழல், முறைகேடுகள், நிர்வாக அராஜகம், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இதற்கு பதிலடி கொடுத்து, திரிணமுல் காங்., – லோக்சபா எம்.பி., மஹுவா மொய்த்ரா கூறியதாவது:

பெண்கள் பாதுகாப்பு குறித்து அமித் ஷா பேசுகிறார். மூன்று ஆண்டுகளாக பற்றி எரியும் மணிப்பூர் குறித்து அவர் எதுவும் பேசாதது ஏன்? பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.

இது அனைவரும் அறிந்ததே. அந்த மாநிலங்களை காட்டிலும், மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு நன்றாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல், மத்தியில் பா.ஜ., தான் ஆட்சியில் உள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்படி இருக்கையில், சட்ட விரோத ஊடுருவலை தடுக்காமல் அமித் ஷா என்ன செய்து கொண்டிருந்தார்?

மேற்கு வங்கத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது. வெறுப்பு அரசியலை விதைப்பதே அக்கட்சியின் நோக்கமாக இருக்கிறது. அக்கட்சியினர் என்ன செய்தாலும், வரும் தேர்தலில் பூஜ்யம் தான் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link