பா.ஜ.,வின் நகலாக செயல்படும் காங்., கேரள முதல்வர் பினராயி கண்டனம்

திருவனந்தபுரம்: தெலுங்கானாவில், பூமிதான நிலத்தில் கட்டப்பட்டிருந்த, 700 வீடுகளை, ஆக்கிரமிப்பு எனக் கூறி, இடித்து அகற்றிய அம்மாநில காங்., அரசுக்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பா.ஜ.,வின் நகலாக காங்., செயல்படுகிறது’ என, விமர்சித்தார்.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கம்மம் மாவட்டத்தில் உள்ள வெலுகுமட்லா என்ற கிராமத்தில், பூமிதான நிலத்தில் கட்டப்பட்டிருந்த, 700 வீடுகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி, அம்மாநில அரசு கடந்த 25ல் இடித்து தள்ளியது. இதனால், அங்கு வசித்த, 3,000க்கும் மேற்பட்டோர் வீடற்றவர்களாகி உள்ளனர்.

இச்சம்பவத்தை குறிப்பிட்டு, மார்க்.கம்யூ., மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முறையான ஆவணங்கள் இருந்தும், கம்மம் மாவட்டத்தின் வெலுகுமட்லா கிராமத்தில் உள்ள, 700 வீடுகளை காங்., அரசு இடித்து தள்ளி உள்ளது. இதனால், 3,000க்கும் மேற்பட்டோர் வீடற்றவர்களாகி உள்ளனர்.

கர்நாடகாவை தொடர்ந்து, தற்போது தெலுங்கானாவிலும், ‘புல்டோசர் ராஜ்ஜியம்’ தலைதுாக்கியிருப்பது கவலைக்குரியது.

கர்நாடகாவின் எலஹங்காவிலும் இது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னும் தெருக்களிலேயே வசிக்கின்றனர். மனிதாபிமானமற்ற இத்தகைய நடவடிக்கைகளை காங்கிரசால் மட்டும் எப்படி முன்னெடுக்க முடிகிறது?

இடிக்கப்பட்ட வீடுகள் வினோபா பாவே தலைமையிலான பூமிதான இயக்கத்தின் போது நிலமற்ற குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டவை. அந்த இயக்கத்தின் குறைந்தபட்ச நோக்கங்களை கூட தெலுங்கானா அரசால் ஏற்க முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. இது குறித்து, கேரளாவில் உள்ள காங்., தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கேரள அரசு பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கி, அவர்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. ஆனால், தெலுங்கானா காங்., அரசோ நில பட்டா வைத்திருப்பவர்களை கூட, போலி பட்டாதாரர்கள் என வகைப்படுத்தி வெளியேற்றி வருகிறது. மக்களை இடம்பெயர செய்யும் கொள்கையை பின்பற்றுவதில், பா.ஜ.,வின் நகலாக காங்., மாறி விட்டது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Source link