பா.ஜ., — வி.சி., கட்சியினர் பயங்கர மோதல் செருப்பு வீச்சு; விறகு கட்டை தாக்குதலில் இருவர் காயம்

அரூர்: அரூரில் நடந்த பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் செருப்பு வீசப்பட்ட நிலையில், பா.ஜ., – வி.சி., கட்சியினர் விறகு கட்டைகளால் மாறி மாறி அடித்துக் கொண்டதில், போலீஸ்காரர் உட்பட இருவர் காயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தர்மபுரி மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி சார்பில், நேற்று காலை 11:15 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், அ.தி.மு.க., – அ.ம.மு.க., – பா.ம.க., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன் பேசுகையில், ”பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை, தமிழக அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதை, தி.மு.க., கூட்டணியிலுள்ள, வி.சி., தலைவர் திருமாவளவன் கேட்பதில்லை. பட்டியலின மக்களை அவர் தவறாக வழி நடத்துகிறார்,” என்றார்.

அங்கிருந்த வி.சி., கட்சியினர், ‘திருமாவளவனை ஒருமையில் பேசக்கூடாது’ என வாக்குவாதம் செய்தனர். இதற்கு, பா.ஜ-.,வினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில், வி.சி., கட்சியினர் செருப்புகளை வீசினர்.

தொடர்ந்து, திருமாவளவனை விமர்சித்து பேசிய, பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணனை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். அரூர் போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிட செய்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து சென்ற பா.ஜ., நிர்வாகிகளின் காரை, வி.சி., கட்சியினர் முற்றுகையிட்டனர். இதில், இரு கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, அங்கு ஹோட்டல் அருகே கிடந்த விறகுகளை எடுத்து, இரு கட்சியினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில், பா.ஜ., இளைஞரணி நிர்வாகி ஒருவர் மற்றும் போலீஸ்காரர் என, இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, பா.ஜ., – வி.சி., கட்சியினர் தனித்தனியாக அளித்த புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Source link