சென்னை: ”பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த கருணாநிதியை, முரட்டு அடிமை என உதயநிதி சொல்வாரா,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில், பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: வாக்குறுதிகளை மறந்த துரோகி ஸ்டாலின்தான். ஆனால், அவர் என்னை துரோகி, பயந்தாங்கோலி என்கிறார். ஆனால், அவரோ ஆட்சி போய் விடும் என்ற பயத்தில், இப்போது, ‘எனது ஆட்சி போனாலும் பரவாயில்லை’ என பேசுகிறார். உங்களின் ஆட்சி போகப்போவது உறுதி.
எந்ததெந்த துறையில் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, அவ்வளவு கொள்ளை அடித்து விட்டனர். ஸ்டாலின் டிரஸ்ட்டில், 8,000 கோடி ரூபாய் உள்ளது. அது எல்லாம் இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமா?
ஏதோ சொந்தப் பணத்தை கொடுப்பது போல, உரிமைத் தொகை பற்றி பேசுகிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், உரிமை தொகை வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். அ.தி.மு.க.,வின் அழுத்தத்தால், பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கிடைக்கிறது. குடும்ப வாரிசு ஆட்சி தொடரக் கூடாது.
ஏற்கனவே, தி.மு.க., கூட்டணியில் பல குழப்பங்கள். தேர்தல் வரை அந்த கூட்டணி நிலைக்குமா என, தெரியவில்லை. இப்போது துணை முதல்வர் பதவி கேட்டு, தே.மு.தி.க.,வும் அந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது.
பா.ஜ.,வுக்கு நான் முரட்டு அடிமை என, உதயநிதி சொல்கிறார். அப்படியென்றால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த உங்கள் தாத்தா கருணாநிதியை, முரட்டு அடிமை என சொல்வீர்களா; அவரை முரட்டு அடிமை என சொல்ல முடியாததால், என்னை சொல்கிறார். கத்துக்குட்டியான உதயநிதி வாய்க்கு வந்ததை பேசக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
