பா.ம.க., அங்கீகாரம் இழப்புக்கு அன்புமணியே காரணம்: ராமதாஸ் மனு

சென்னை: ‘பாட்டாளி மக்கள் கட்சி அங்கீகாரம் ரத்து ஆனதற்கு, அன்புமணியின் மோசமான செயல்பாடுகள் தான் காரணம்; தற்போது அவர் கட்சி உறுப்பினர் கூட கிடையாது’ என்று, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க., சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த, அதன் தலைவர் அன்புமணிக்கு தடை விதிக்க கோரி, ராமதாஸ் சார்பில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி, அன்புமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி எம்.தர்மபிரபு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் தரப்பில், 18 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் விபரம்:

கட்சி சட்ட விதிகளை திருத்தியது குறித்து, அன்புமணி கேள்வி எழுப்ப முடியாது. அந்த திருத்தத்தை, தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவர், அதுகுறித்து கேள்வி எழுப்ப முடியாது.

கட்சித் தலைவராக இருந்த அன்புமணி, சரியாக செயல்படாததால் தான், கட்சியின் அங்கீகாரத்தை இழக்க நேரிட்டது. எனவே, என் வழக்கை நிராகரிக்க கோரி, அன்புமணி தாக்கல் செய்த மனுவை, அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். உண்மைக்கு மாறாக, பல்வேறு குற்றச்சாட்டுகளை, அன்புமணி முன்வைத்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டு, வரும் 13க்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி.

Source link