சென்னை: புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவதில் பா.ம.க., தலைவர் அன்புமணி உறுதியாக இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 1990 சட்டசபை தேர்தல் முதல் புதுச்சேரியில் போட்டியிடும் பா.ம.க.,வுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தது. 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில், புதுச்சேரியில், காங்., – தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., வெற்றி பெற்றது.
கடந்த 2021ல் தமிழகத்தில் அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியில் இருந்தபோதும், புதுச்சேரியில் ஒரு தொகுதியை கூட ஒதுக்க, பா.ஜ.,வும், என்.ஆர்., காங்கிரசும் மறுத்து விட்டன. அந்த தேர்தலில், பா.ம.க., போட்டியிடாததால், மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது.
தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஐ., கூட்டணியில், பா.ம.க., இடம்பெற்றுள்ளது. இந்த முறையும், புதுச்சேரியில் அக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க, பா.ஜ.,வும், என்.ஆர்., காங்கிரசும் மறுத்துவிட்டன. இதனால், புதுச்சேரியில் தனித்து போட்டியிட உள்ளதாக, அம்மாநில பா.ம.க., அமைப்பாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடாமல் அரசியல் செய்ய முடியாது என்பதால், மாகி, ஏனாம் தவிர புதுச்சேரியில் உள்ள மற்ற 28 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதென, அன்புமணி முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
