பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, கட்சி யாருக்கு என்ற விவகாரம் தலை துாக்கியது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பினர் முறையிட்டதோடு, டில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா, கடந்த டிச., 4ல் பிறப்பித்த உத்தரவில், ‘அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது. மனுக்களாக வழங்கப்படும் கடிதங்களின் அடிப்படையில் தான், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியும்.
‘எனவே, பா.ம.க., தொடர்பாக, ஏற்கனவே தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள், ஆணைய அதிகார வரம்புக்குள் வரவில்லை. எனவே, பா.ம.க., தொடர்பான பிரச்னையில், சம்பந்தப்பட்ட இரு தரப்பும் சிவில் நீதிமன்றத்தை நாடி, நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கும் என தெரிகிறது.
– டில்லி சிறப்பு நிருபர் –
