பிங்க் கார்டு வேலை செய்யாது என பரவும் குற்றச்சாட்டுகளுக்கு டில்லி முதல்வர் ரேகா மறுப்பு

புதுடில்லி:”டில்லி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பிங்க் நிற அட்டைகள் குறித்து, அரசியல் காரணங்களுக்காக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அந்த தகவல்கள் பொய்யானவை,” என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

கடந்த மாத துவக்கத்தில், டில்லியில் உள்ள பெண்கள் மெட்ரோ ரயில், டி.டி.சி., பஸ்கள், டவுன் பஸ்களில் இலவச பயணத்தை உறுதி செய்யும், பிங்க் நிற அட்டைகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துவக்கி வைத்தார்.

அந்த இலவச பயண அட்டையை பெற, பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், தங்களின் அரசியல் பறிபோவதாக கருதும் சில கட்சிகள், அந்த அட்டைகள் குறித்து, தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

‘ஒரு முறை பயணம் செய்ய மட்டுமே அந்த அட்டைகள் பயன்படுத்தப்படும். அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. அந்த அடையாள அட்டையை சொருகினால், வருமான வரி தாக்கல் செய்துள்ளீர்களா என்ற விவரம் தெரிய வரும்’ என பலவாறாக புரளியை கிளப்பி வருகின்றனர்.

அவற்றை பொய் என கூறி, நேற்று வீடியோ வெளியிட்ட முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:

எத்தனை முறை வேண்டுமானாலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும்.

ஏற்கனவே, பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களின் படி, 5, 10, 15 நிமிட இடைவெளியில், மெட்ரோ ரயில், டில்லி நகர பஸ்கள் போன்றவற்றில் பயணம் செய்ய முடியும்.

இது, முந்தைய ஆம் ஆத்மி அரசு, 2019ல் வழங்கிய பிங்க் பேப்பர் அட்டையை மாற்றியுள்ளது. ஒரு நாடு; ஒரே அட்டை என்ற கோஷத்தை அடிப்படையாக கொண்டது. அந்த அட்டை குறித்து, வெளியான தகவல்கள் பொய்யானவை.

இவ்வாறு முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

Source link