சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில், 8.27 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. அதேபோல், 9 லட்சம் மாணவர்கள் எழுதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 6ம் தேதி வரை நடக்க உள்ளது.
மாணவர்களை கண்காணித்து முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால், தேர்வறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என அனைவருமே, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
இந்தாண்டு பொதுத்தேர்வில், கடந்தாண்டை விட அதிக தேர்ச்சி சதவீதம் பெற வேண்டும் என, பள்ளிக் கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனால், ‘காப்பி’ அடிக்கும் மாணவர்களிடம் கடுமை காட்டக் கூடாது என, பறக்கும் படையினருக்கு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்கள், தற்போது புத்தகங்களை, ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்து, நுாதன முறைகளில் பிட் அடித்து வருகின்றனர்.
தேர்வறை கண்காணிப்பின் போது, மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதைக் கண்டறிந்து அவர்களிடம் சொன்னால், எழுதாமல் பிட் வைத்திருந்தால் கண்டித்து விட்டு விடும்படி கூறுகின்றனர். நாங்கள் மாணவர்களை சோதனையிட்டால், அது, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்கின்றனர்.
மாணவியரின் அருகில் சென்று, ஆண் ஆசிரியர்கள் கண்காணித்தால், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.
இதனால், ‘பிட் அடித்தாலும் தப்பு; அதை பிடித்தாலும் தப்பு’ என்பதால், நாங்கள் எதை செய்தாலும், அது எங்களுக்கு தலைவலியாக மாறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
