நடிகர் பிரசாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக்கவுள்ள படம் “ரஞ்சன் தி அட்வகேட்”. இப்படம் தெலுங்கில் வெளியான ‘கோர்ட்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் பிரசாந்த் வழக்கறிஞராக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதில், புது முகங்களாக நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி உள்ளிட்ட சிலர் அறிமுகமாகவுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக ஹரியும், கதாநாயகியாக பிரியங்காவும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தியாகராஜன் இயக்கத்தில் உருவாக்கவுள்ள இப்படத்தை ப்ரீத்தி தியாகராஜன் தயாரிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாந்த்தின் பிறந்த நாளை (06-04-26) முன்னிட்டு இந்த படத்திற்கான தலைப்பு வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கதிரேசன், பைவ் ஸ்டார் செந்தில் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், செல்வமணி மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் செல்வமணி பேசுகையில், “இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும். எனக்கும் பிரசாந்திற்கும் 35 வருடப் பழக்கம். அவரை முதல்முறை எப்படி பார்த்தேனோ அப்படியே இன்று வரையிலும் இருக்கிறார். அவரது நடிப்பில் மூன்று படங்களை இயக்கி இருக்கிறேன். மீண்டும் அவரை வைத்து படம் இயக்க நினைக்கிறேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள இப்படம், தமிழில் ரீமேக் செய்யப்படும் நிலையில், இங்கும் மிகப் பெரிய அளவிலான வெறியைப் பதிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
