பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் நாளை, தமிழக பா.ஜ., மாவட்ட தலைவர்களுடன் கலந்துரையாட இருந்த நிகழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் நாளை, தமிழக பா.ஜ., மாவட்ட தலைவர்களுடன் கலந்துரையாட இருந்த நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. ‘பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சிரமப்படுத்த கூடாது’ என, பிரதமர் மோடி கூறி விட்டதாக தெரிகிறது.

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, பிரதமர் மோடி இன்று மாலை 3:20 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்து, மாலை 6:40 மணிக்கு விமான நிலையம் வரும் மோடி, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். இரவு, சென்னையில் தங்கும் பிரதமர் மோடியை, பா.ஜ., மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர்.

நாளை காலை 11:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, தமிழக பா.ஜ.,வில் உள்ள 66 மாவட்ட தலைவர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக, பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருந்தார். மாவட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த சூழலில், ‘தேர்தல் பிரசாரத்திற்கு, மூன்று வாரங்கள் கூட இல்லை. தேர்தல் பணியில் இருக்கும் நிர்வாகிகள் ஒரு நிமிடத்தை கூட வீணாக்க கூடாது. கூட்டத்தில் பங்கேற்க அனைவரும் சென்னைக்கு வரும் நேரத்தில், புதிய வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபடலாம். மாவட்ட தலைவர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசுகிறேன். தேர்தல் பணியில் ஈடுட்டு உள்ளவர்கள் நேரத்தை வீணடிக்க கூடாது’ என, பிரதமர் மோடி கூறி விட்டதாக தெரிகிறது.

இதனால், மாவட்ட தலைவர்களுடனான மோடியின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அவர், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் பணிகள் குறித்து அறிவுரை வழங்க உள்ளார்.

Source link