பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்; மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள்  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள பெதுவாடஹரி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். 

இந்த கூட்டத்தில், “பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் கொல்கத்தாவைத் தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி ஏன் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கவில்லை? இதன் பின்னணி என்ன? வரைவு திட்டம் தயாரா? தேர்தலுக்கு முன்பாக மற்றொரு பஹல்காம் தாக்குதலுக்குத் திட்டமா?  

மேற்கு வங்காள மக்களைக் குறிவைத்தால் அதனை நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். இந்தியக் குடிமக்களாகிய நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களை சகித்துக் கொள்ளமாட்டோம். பிரதமராகிய  நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இதற்கு, நீங்கள் பதவி விலக வேண்டும்” என்று பேசியிருந்தார். 

விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு பஹல்காம் போன்ற அசம்பாவிதத்தை நடத்தத் திட்டமா? என்று முதல்வரே கேள்வி எழுப்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Source link