”பிரதமர் மோடி மிகவும் விபரம் தெரிந்தவர். நான் அவரை குறைத்து பேச மாட்டேன்,” என தி.மு.க., – எம்.பி., சிவா புகழ்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக, டில்லியில் இருக்கிறேன். ஹிந்தி எனக்கு தெரியாது, ஆங்கிலத்தை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறேன். பார்லி.,க்கு பிரதமர் மோடி வரும்போது, அங்கிருப்போர் அனைவரையும் பார்த்து, ‘நமஸ்கார்’ என்பார். என் அருகில் வரும்போது மட்டும், ‘வணக்கம் சிவா’ என அழகு தமிழில் வணக்கம் சொல்லுவார்.
அவர் சாதாரணமானவர் அல்ல; மிகவும் விபரம் தெரிந்தவர். அவரை எப்போதும் நான் குறைத்து பேச மாட்டேன். எம்.பி.,க்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவரோ, அந்த மாநில மொழியில் வாழ்த்து செய்தி அனுப்புவார் பிரதமர் மோடி.
அவருக்கு குஜராத்தியில் நான் நன்றி கடிதம் அனுப்புவேன். பின், அவர் என்னை பார்க்க நேரிடும்போது, கைகுலுக்கியபடியே, ‘குஜராத்தியில் பதில் கடிதம் அனுப்பி இருந்தீர்கள்; மகிழ்ச்சி’ என்பார்.
‘அதே மகிழ்ச்சி தான், எனக்கு நீங்கள் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய போது இருந்தது’ என மோடியிடம் பதில் சொல்வேன். அவரவர் தாய்மொழி அவரவருக்கு முக்கியம். அப்படி இருக்கும் போது, ஹிந்தி ஏன் என்பதுதான், என் கேள்வி. இவ்வாறு கூறினார்.
-நமது நிருபர்-
