'பிரதமர் மோடி வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு': தமிழக பா.ஜ.,

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக, பா.ஜ., சார்பில், கட்சியின் தலைமை தேர்தல் அலுவலகம், சென்னை அமைந்தகரையில் நேற்று திறக்கப்பட்டது.

அலுவலகத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

இந்த விழாவுக்கு வந்துள்ள பா.ஜ.,வினரில் 20 பேர், எம்.எல்.ஏ.,க்கள் ஆகலாம்; இறைவன் அருள் இருந்தால், அமைச்சர்களாக கூட வரலாம். அரசு ஊழியர்களுக்கு எதிரானது, தி.மு.க., ஆட்சி. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை; டி.ஜி.பி.,யை கூட நியமிக்க முடியாத அளவிற்கு இந்த ஆட்சி இருக்கிறது; நோட்டை கொடுத்து ஓட்டுகளை வாங்கி விடலாம் என தெம்பாக இருக்கின்றனர்.

தமிழகம் முழுதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக, தி.மு.க.,வினர் ஆங்காங்கே பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். புத்தகம் எடுத்து செல்ல வேண்டிய மாணவர்கள், கஞ்சா எடுத்து செல்கின்றனர்; ஒவ்வொருவரின் பையிலும் பீர் பாட்டில் இருக்கிறது. டாஸ்மாக்கில் விற்பனை அதிகமாக நடைபெறவில்லை என்று தான் தி.மு.க., அரசு கவலைப்படுகிறது.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு 15 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்; 11 வந்தே பாரத் ரயில்கள், 11 மருத்துவக் கல்லுாரிகள் உட்பட பல திட்டங்களை கொடுத்து இருக்கிறார். இவற்றையெல்லாம் சரியான முறையில் மக்களின் பார்வைக்கு எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், ”முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி நடத்துவதற்கான திறமை இல்லை; மக்களிடம் பொய்யை சொல்லி, ஓட்டுகள் வாங்கி விடலாம் என நினைக்கிறார். புதிதாக கட்சி துவக்கும் சசிகலாவால், தே.ஜ., கூட்டணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது; அவருடன் எந்த பேச்சும் நடத்தவில்லை.

”பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பின் தான், அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்த உள்ளோம். பா.ஜ., சார்பில் அ.தி.மு.க.,விடம் எவ்வித டிமாண்டும் வைக்கவில்லை,” என்றார்.

Source link