அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் தொடர்ச்சியாக விஜய்யையும், தவெக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். அதிமுக எம்ஏக்கள் ராஜினாமா செய்து ஆளுங்கட்சியில் இணைவது மற்றும் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறுவது உள்ளிட்டவை குறித்தும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் விஜய்யை வைத்து தவெக புதிய திட்டம் ஒன்று போடுவதாக ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி. உதயகுமார் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் பேசுகையில், முதல்வர் விஜய் அப்படி செய்தார் இப்படி செய்தார் என்று செய்யாதது எல்லாத்தையும் போலியான நரேடிவ் செய்கிறார்கள். அதனை ரீல்ஸ் வீடியோ செய்து பல மொழிகளில் வெளியிட்டு, இன்ப்ளுயன்சர்களை வைத்து விஜய் பிம்பத்தை கட்டமைக்கின்றனர். இதனைத்தாண்டி தவெக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து வேறேந்த வேலையும் செய்ததாக தெரியவில்லை.
விஜய்யின் இந்த மாய பிம்பத்தை வைத்து தான் 2029 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக நாம் முதல்வர் விஜய்யை முன்னிறுத்துவதற்கு தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து கொண்டிருக்கிறது. டெல்லியில் இருப்பவர்கள் உடனடியாக விழித்து கொள்ள வேண்டும் என்பது எச்சரிக்கையாக உள்ளது. விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியாது.
ஆனால் நடந்து முடிந்து தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் எந்த வரலாறும், தியாகமும், அரசியல் பின்புலமும் இல்லாமல், போராட்டம் எதிலும் கலந்துக் கொள்ளாமல் ரீல்ஸ் மூலமாக மக்களை மூளை சலவை செய்து இன்றைக்கு நிழல் எது, நிஜம் எது மக்களை குழப்பி முதல்வர் அரியணையில் விஜய் அமர்ந்து இருக்கிறார். முதலமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாத ஒருவர் இன்றைக்கு அந்த இடத்தில் அமர்ந்துள்ளார் என விமர்சனம் செய்துள்ளார் ஆர்.பி. உதயகுமார்.
தொடர்ந்து பேசிய அவர் விஜய்யை வைத்து போலியான ரீல்ஸ் வீடியோ உருவாக்கி எல்லா மொழிகளிலும் இன்ப்ளுயன்சர்களை கூலிக்கு அமர்த்தி, இன்றைக்கு விஜய் விஜய் என்று கூப்பாடு போட வைக்கின்றனர். இதன் மூலம் 2029 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு தவெக கட்சி முன் ஏற்பாடுகளை எடுத்துக்கொண்டு இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் யாரிடம் விஜய் பருப்பு வெந்தாலும், பிரதமர் மோடியிடம் அவரின் பருப்பு வேகாது என்பது எனவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
அவருடைய இந்த வீடியோ தற்போது பெரியளவில் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் 2029 நாடாளுமன்ற தேர்தலின் போது, அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடக்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தினை கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. விரைவில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் தவெக ஆட்சி நீடிக்காது. விரைவிலே இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மூன்று ஆண்டுகளில் தவெக ஆட்சி முடிவுக்கு வந்து விடும். 6 மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் எனவும் தொடர்ச்சியாக கருத்துக்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
