பிரேக் ஆன உடனே ஒரு ரிலேஷன்ஷிப்பில் கமிட் அவர்கள் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்படும்.

ரிலேஷன்ஷிப் பிரேக் அப் ஆனவுடன் பலரும் எதிர்கொள்ளும் ஒரு சவால் அடுத்த ரிலேஷன் ஷிப். முதல் ரிலேஷன் ஷிப் போல் அடுத்தடுத்த ரிலேஷன்ஷிப் உடனடியான ஒரு ஈர்பை தரும் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரம் இன்னும் மெச்சூர்டான மனநிலைக்கும் நகர்ந்திருப்பார்கள். வெறுமை, எதிர்பார்ப்பு என ரிலேஷன்ஷிப் பற்றிய புரிதல் மாறியிருக்கும்.
பிரேக் அப் ஆன பின், சிலர் உறவுகள் மீதான நம்பிக்கையை இழந்து, வெறுமையை நோக்கி நகர்வார்கள். சிலர் வாழ்வில் இருக்கும் வெறுமையை விரட்ட அடுத்த சில நாள்களிலேயேகூட மற்றொரு ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆவார்கள். இது அவரவர் விருப்பம். மனநிலையைச் சார்ந்தது.

ஆனால், ஒரு பிரேக் அப்பிற்கு பிறகு, அடுத்த ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆகுபவர்கள் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்படும்.”ஒருவரை காதலித்து விட்டு உடனே எப்படி இன்னொருவர் மீது காதல் வரும்’ என்பதெல்லாம் பலரும் பொதுவாக எதிர்கொள்ளும் கேள்விகளே…
பிரேக் அப்பிற்கு பின் நம் மூளையில் நிகழும் ரசாயன மாற்றங்கள் என்னென்ன? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பன குறித்த தகவல்களைப் பகிர்கிறார் உளவியல் ஆலோசகர் ப்ரீனு…
“ரிலேஷன்ஷிப் பிரேக் அப் என்பது இயல்பானது. ஆனால் அது உங்களை அதிகமாக பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகள் இருக்கின்றன.

ஒருவரிடம் பழக ஆரம்பிக்கும்போதே உங்கள் ரிலேஷன்ஷிப்பின் எல்லைகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிகழ்வை எப்படி எதிர்கொள்கிறோம், எப்படி கையாள்கிறோம், ஒரு பிரச்னையிலிருந்து எப்படி வெளிவருகிறோம் என்பதெல்லாம் நாம் வளர்ந்த விதம், சூழல் ஆகியவற்றைப் பொறுத்தது. இது நபருக்கு நபர் வேறுபடும். நம் வாழ்வில் ஏற்படும் இழப்புகளை, நம் மனது ஏற்றுக்கொண்டு அதில் இருந்து சராசரி மனநிலைக்கு வர நாம் ஆறு படிநிலைகளை கடந்து வர வேண்டியிருக்கும். இதனை க்ரீஃப் சர்கிள்( grief circle ) என்பார்கள்.
1. ஓர் இழப்பு ஏற்பட்டால் முதலில் மனதளவில் அதிர்ச்சி ஏற்படும்.
2. பின் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததை ஏற்றுக்கொள்ள மனது மறுக்க ஆரம்பிக்கும்.
3. அதன் பின் கோபம் வரும். பின் கோபம் குறைந்து, சம்பந்தப்பட்ட நபரிடம் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்ச ஆரம்பிப்போம். அதில் தோற்கும் போதுதான் அவர்கள் இனி நம்மவர் இல்லை என்பதை முழுவதுமாக மனது ஏற்றுக்கொள்ளும். இந்த மனப்பக்குவம் சிலருக்கு ஒரு வாரத்தில் வரலாம். சிலருக்கு ஒரு மாதத்தில் வரலாம். சிலருக்கு சில ஆண்டுகளில் வரலாம். சிலருக்கு கடைசி வரை வராமல் அந்த நபரின் நினைவிலேயே வாழ ஆரம்பிப்பார்கள்.
அதிர்ச்சி, மறுப்பு இரண்டுமே பாதிக்கப்பட்டவர் மட்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மறுப்பு படிநிலையில் இருக்கும் போதுதான் பிரேக் அப் செய்தவரின் வாட்ஸ் அப்பை மீண்டும் மீண்டும் பார்ப்பது, ஸ்டேட்டஸ் செக் செய்வது, லாஸ்ட் சீன் செக் செய்வது போன்ற எண்ணங்கள் எல்லாம் வரும்.

4. அடுத்த படிநிலை கோபம். இதில்சிலர் தன்னைத்தானே வருத்திக் கொள்வார்கள். உதாரணமாக தாடி வளர்ப்பது, கைகளை கட் செய்து கொள்வது, சாப்பிடாமல் பட்டினி கிடப்பது போன்றவற்றை சொல்லலாம். இன்னும் சிலர் மற்றவர்களிடம் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவார்கள்.
5.அதன் பின் வரக்கூடியது கெஞ்சுதல் படிநிலை. நடந்த எல்லா பிரச்னைகளிலும் தவறை தனதாக்கிக் கொண்டு பிரேக் அப் செய்தவருடன் சேர்வதற்காக அவர்களை கெஞ்சுதல்.
6. இந்த சூழல் வரும்போது சுயமரியாதையை இழந்துகூட சம்பந்தப்பட்ட நபரை தன் வாழ்க்கையில் இருக்க வைக்க பார்ப்பார்கள். அதன்பின் வெறுப்பு ஏற்பட்டு அந்த நபரை மறந்து வாழ ஆரம்பிப்பார்கள்.
பிரேக் அப் ஆகும்போது நாம் சம்பந்தப்பட்ட நபரை மிஸ் செய்கிறோம் என்பதைவிட நமக்கு அவர்கள் பழக்கிய விஷயங்களை மிஸ் செய்கிறோம் என்பதே உண்மை. இதனை லவ் ரிச்சுவல்ஸ் என்பார்கள். அதாவது காலையில் எழுந்ததில் இருந்து, ‘சாப்டியா’, ‘ஆஃபிஸ் கிளம்பிட்டியா’ என்பது போன்ற ஒருவரின் வழக்கங்களுக்கு நம் மனது பழக்கப்பட்டுவிடும். திடீரென்று அப்படியான அக்கறை இல்லாத போது வெறுமை ஏற்பட்டு ஒருவரை மிஸ் செய்யும் உணர்வு வரலாம்.
அந்த வெறுமையை விரட்டவே சிலர் உடனே அடுத்த ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆவார்கள். ஒரு வெறுமையான சூழலில் யாரேனும் புதிய நபர் அக்கறை காட்டும்போது அந்த நபர் மீது ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். நாளடைவில் அது காதலாக மாறலாம். இது தவறில்லை. அப்படி இரண்டாவதாக ஒரு ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆகும் முன் உங்களைப் பற்றிய தெளிவான புரிதல் அவருக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு கமிட் ஆகுங்கள்.

பிரேக் அப் ஆன பிறகு குறைந்த பட்சம் ஆறு மாததிற்காவது அந்த நபரிடம் தொடர்பில் இல்லாமல் இருங்கள். ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் யோசிக்கும்போதுதான் அதை உங்களால் மறக்க இயலாது. வாழ்க்கையை நகர்த்த முடியாது. எல்லாத்தையும் மறந்து ஆறு மாதத்தை கடந்துவிட்டால் புது எனர்ஜியுடனும் மனப்பக்குவதுடனும் நீங்கள் வாழ ஆரம்பிப்பீர்கள்” என்று விளக்கினார் ஃப்ரீனு.
