கபோரோன்: பிரேசில் வீராங்கனை கார்டோசோ, ஒரு இன்னிங்சில் 9 விக்கெட் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.
போட்ஸ்வானா தலைநகர் கபோரோனில், பெண்களுக்கான சர்வதேச ‘டி-20’ கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பிரேசில் அணி (202/8, 20 ஓவர்), 189 ரன் வித்தியாசத்தில் லெசோதோ அணியை (13/10, 6.2 ஓவர்) வீழ்த்தியது. லெசோதோ அணி சார்பில் 6 பேர் ‘டக்-அவுட்’ ஆகினர். அதிகபட்சமாக போய்டுமெலோ 5 ரன் எடுத்தார்.
‘வேகத்தில்’ மிரட்டிய பிரேசில் வீராங்கனை லாரா கார்டோசோ, 3 ஓவரில் (2 ‘மெய்டன்’), 4 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, ஒரு ‘ஹாட்ரிக்’ உட்பட 9 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் ‘டி-20’ அரங்கில் ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீரர்/வீராங்கனைகள் வரிசையில் முதலிடத்தை கைப்பற்றினார்.
இதற்கு முன், பூடான் வீரர் சோனம் யேஷே, 4 ஓவரில் (ஒரு ‘மெய்டன்’), 7 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் (எதிர்: மியான்மர், 2025, இடம்: கெலேபு, பூடான்) சாய்த்திருந்தார்.
தவிர, ‘டி-20’ போட்டியில் ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீராங்கனையானார் கார்டோசா. இதற்கு முன், இந்தோனேஷியாவின் ரோஹ்மாலியா, 3.2 ஓவரில் (3 ‘மெய்டன்’), ரன் எதுவும் வழங்காமல் 7 விக்கெட் (எதிர்: மங்கோலியா, 2024, இடம்: பாலி, இந்தோனேஷியா) வீழ்த்தி இருந்தார்.
