தே .மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, கட்சியின் தர்மபுரி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பிரசாரம் மேற்கொண்டார்.
அதில், தி.மு.க., – காங்., – வி.சி.க., உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். பிரேமலதா பேசிக் கொண்டிருந்தபோது, அவரது பிரசார வாகனத்தின் முன் நின்றிருந்த வி.சி.க.,வினர், கையில் வைத்திருந்த பேனரை திடீரென உயர்த்தி பிடித்தனர்.
அதில், ‘வி.சி.க., தலைவர் திருமாவளவன் உங்கள் பெயரை உச்சரித்து அழைக்கும் போது, எழுந்து நிற்காதது ஏன், ஏன், ஏன்?’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதை கண்டதும் பிரேமலதா கோபம் அடைந்தார். உடனடியாக சுதாரித்து கொண்ட, வி.சி.க., தர்மபுரி மா.செ., பாண்டியன், பேனரை அகற்றினார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, வி.சி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கடலுாரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரேமலதா பெயரை திருமாவளவன் உச்சரித்தபோது, அவர் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடி சிரித்துக் கொண்டிருந்தார்.
இந்த வீடியோ, கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி தொகுதியில், ஜாதி அரசியல் தலைதுாக்கியுள்ளது. இது கூட்டணி தர்மத்திற்கு உகந்தது அல்ல. வேறுவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு கூறினர்.
