பிற கட்சிகளை விட பா.ஜ.,வுக்கு 10 மடங்கு அதிக நன்கொடை

புதுடில்லி: நாடு முழுதும் உள்ள பிற தேசிய கட்சிகளை விட, பா.ஜ.,வுக்கு கடந்த 2024 – 25 நிதியாண்டில் 10 மடங்கு அதிக நன்கொடை கிடைத்துள்ளது.

இது குறித்து, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுதும் 2025ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த தேசிய கட்சிகளுக்கும் 11,343 பங்களிப்பாளர்கள் மூலம், 6,648.56 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. இதில், பா.ஜ.,வுக்கு மட்டும் 6,074.01 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 517.39 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.

இதே காலகட்டத்தில் காங்., ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் தேசிய மக்கள் கட்சி பெற்ற நன்கொடைகளை எல்லாம் ஒன்று சேர்த்தால் கூட, பா.ஜ., பெற்ற நன்கொடையின் அளவு 10 மடங்கு அதிகம்.

கடந்த 19 ஆண்டுகளாக 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை நன்கொடையாக பெறவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்து உள்ளது.

மொத்த நன்கொடையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 92.18 சதவீதம்; அதாவது 6,128.78 கோடி ரூபாய்.

தனிப்பட்ட நபர்கள் 505.66 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை கொடுத்துள்ளனர். கார்ப்பரேட் நன்கொடைகள் மூலம் பா.ஜ., 5,717.16 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இது, பிற தேசிய கட்சிகள் திரட்டிய மொத்த நன்கொடைகளை விட 13 மடங்கு அதிகம்.

அதே போல், தனி நபர்களிடம் இருந்து 345.94 கோடி ரூபாயை பா.ஜ., நன்கொடையாக வசூலித்துள்ளது.

காங்., கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் 383.86 கோடி ரூபாயும், தனி நபர்கள் மூலம் 132.39 கோடி ரூபாயும் நன்கொடையாக கிடைத்துள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் அறக்கட்டளைகளில் ‘புரூடென்ட்’ முன்னிலை வகிக்கிறது. இந்த அறக்கட்டளை மிக அதிகபட்சமாக 2,413.46 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வழங்கிஉள்ளது.

அதில், பா.ஜ.,வுக்கு 2,180.71 கோடியும், காங்., கட்சிக்கு 216.33 கோடியும், ஆம் ஆத்மிக்கு 16.41 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன.

‘ சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா ‘ நிறுவனம், பா.ஜ.,வுக்கு 100 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link