பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் துப்பு துலக்க உதவிய தோட்டக்காரர்

மதுரை: பிளஸ் 2 மாணவி கொலையில், ஒன்பது நாட்களுக்கு பின், குற்றவாளியை போலீசார் கைது செய்ய, அப்பகுதி தோட்டக்காரர் ஒருவர், துப்பு கொடுத்து உதவியுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி, பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவத்தில், ராமநாத புரம், சாயல்குடி தர்மமுனீஸ்வரன், 39, கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, நேற்று முன்தினம் இரவு, நெல்லை சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.

நெல்லை டி.ஐ.ஜி., சரவணன் கூறியதாவது:

சம்பவம் தொடர்பாக, ஆரம்பத்தில் ‘சிசிடிவி’ ஆதாரங்கள் கிடைக்க வில்லை. வீடு, வீடாக விசாரணை நடத்தினோம். குற்றவாளி மார்ச் 7, 8, 9, 10 ஆகிய நாட்களில் வேடநத்தம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில், துாத்துக்குடி வந்த அவர், வேடநத்தம் பகுதியில் தங்கியிருந்தார். ஊரின் ஒதுக்குப்புற காட்டுப்பகுதியில், பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் பெண்களை கண்காணித்து வந்துள்ளார்.

மார்ச் 7, 8, 9 ஆகிய நாட்களில், அவரது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததை, அப்பகுதியை சேர்ந்த ஒரு தோட்டக்காரர், சந்தேகத்தில் தன் மொபைல் போனில், படம் எடுத்துள்ளார். கொலை நடந்த பின், தகவலை அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

விசாரணையில், அந்த வாகனம், டிசம்பர் மாதமே திருடப்பட்டது தெரிந்தது. அதன் பதிவு எண்ணில் உள்ள, 3, 6 ஆகிய எண்களை, 8, 9 என பெயின்டில் மாற்றி உள்ளார். காற்றாலை பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளும், இந்த தகவலை உறுதிப்படுத்தின. இதுவே குற்றவாளியை கைது செய்ய காரணமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசுக்கு துப்பு கொடுத்த தோட்டக்காரரை, டி.ஐ.ஜி., பாராட்டினார்.

Source link