சென்னை :
தமிழகத்தில், பெட்ரோலிய பொருட்களை சார்ந்த மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பிளாஸ்டிக் போன்றவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உ ள்ளன.
எனவே, ‘ஆர்டர்’ கொடுத்த நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் பொருட்களை வழங்கவில்லை எனில், விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்யுமாறு மத்திய தொழில் துறை மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயலுக்கு, ‘டான்ஸ்டியா’ தலைவர் வாசுதேவன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘பாலியோல், அஸ்பால்ட்’ உள்ளிட்ட பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக், வாகன உதிரிபாகங்கள், கட்டுமான பொருட்கள், பெயின்ட், காலணி, மெத்தை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பதில், பெரும்பாலானவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான்.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் நம் நாட்டில், பெட்ரோலிய மூலப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், வினியோகம் பாதிக்கப்பட்டு, அவற்றின் விலை, 30 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது, சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ‘ஆர்டர்’ கொடுத்துள்ள நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில் பொருட்களை, வழங்கவில்லை எனில், 2 சதவீதம், 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். தற்போதைய அசாதாரண சந்தை நிலையை கருத்தில் கொண்டு, ஒப்பந்தங்களில் அபராத விதிகளை தளர்த்துமாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்காசிய போரால், பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிளாஸ்டிக், வாகன உதிரிபாகங்கள், கட்டுமான பொருட்கள், பெயின்ட், காலணி, மெத்தை டெலிவரி தாமதம்
‘ஆர்டர்’ கொடுத்துள்ள நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில் பொருட்களை வழங்கவில்லை எனில், 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது
