பீஜிங்: ஈரானில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில், பள்ளி மாணவியர் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில், அவசர மனிதநேய உதவியாக, 1.84 கோடி ரூபாய் வழங்க சீனா முடிவு செய்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, பிப்., 28ல் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. அப்போது, மினாப் நகரில் உள்ள பெண்கள் துவக்கப் பள்ளியை ஏவுகணை தாக்கியதில், 180 மாணவியர் வரை உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
அமெரிக்க ராணுவ விசாரணையில், பழைய தகவல்களால் தவறுதலாக பள்ளி கட்டடம் குறிவைக்கப்பட்டது தெரிய வந்தது. இத்தாக்குதலுக்கு நம் அண்டை நாடான சீனா கண்டனம் தெரிவித்தது.
சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், ”ஈரானில் அமெரிக்க தாக்குதலில் பள்ளி மாணவியர் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. உயிரிழந்த மாணவியருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.
பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மீதான தாக்குதல்களை சீனா கடுமையாக கண்டிக்கிறது. பள்ளிகளை தாக்குவது சர்வதேச மனிதநேய சட்டத்தை மீறுவதுடன், மனிதாபிமானத்தின் அடிப்படை வரம்பை கடந்த செயல்,” என்றார்.
இதற்கிடையே, சீன சிவில் செஞ்சிலுவை சங்கம், ஈரான் செஞ்சிலுவை சங்கத்திற்கு, 1.84 கோடி ரூபாயை அவசர உதவியை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதி, கொல்லப்பட்ட மாணவியரின் பெற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
