பீலேவை சமன் செய்த மெஸ்ஸி * ரொனால்டோவை நெருங்குகிறார்

ஆர்லாண்டோ: அமெரிக்காவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இன்டர் மயாமி, ஆர்லாண்டோ சிட்டி அணிகள் மோதின. முதல் பாதியில் இன்டர் மயாமி அணி 0-2 என பின்தங்கியது. இரண்டாவது பாதியில் இன்டர் மயாமி அணியின் சில்வெட்டி (49வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.

57வது நிமிடத்தில் சில்வெட்டியிடம் இருந்து பந்தை பெற்ற மெஸ்ஸி, கோலாக மாற்றினார். அடுத்து செகோவியா (85) கோல் அடித்தார். போட்டியின் கடைசி நிமிடத்தில் இன்டர் மயாமி அணிக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதில் அசத்திய மெஸ்ஸி, மீண்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் இன்டர் மயாமி அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

70வது கோல்

இதையடுத்து, கால்பந்து வரலாற்றில் ‘பிரீ கிக்’ மூலம் அதிக கோல் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தை, பிரேசிலின் ‘ஜாம்பவான்’ மறைந்த பீலேயுடன் சமன் செய்தார் மெஸ்ஸி. இருவரும் தலா 70 முறை ‘பிரீ கிக்’ கோல் அடித்துள்ளனர். முதல் இடத்தில் பிரேசிலின் ஜுனிஹோ (77) உள்ளார்.

பிரேசிலின் ரொனால்டினோ (66), இங்கிலாந்தின் டேவிட் பெக்காம் (65), போர்ச்சுகலின் ரொனால்டோ (64), 3, 4, 5வது இடங்களில் உள்ளனர்.

அடுத்து ‘900’

மெஸ்ஸி இதுவரை அர்ஜென்டினா, கிளப் அணிகளுக்காக மொத்தம் 898 கோல் (1139 போட்டி) அடித்துள்ளார். இன்னும் 2 கோல் அடிக்கும் பட்சத்தில் 900 கோல் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் ஆகலாம். முதலிடத்தில் ரொனால்டோ (965) உள்ளார்.

தவிர குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய முதல் வீரர் என மெஸ்ஸி சாதனை படைக்கலாம். ரொனால்டோ 1238 போட்டியில் தான் இம்மைல்கல்லை (900 கோல்) எட்டி இருந்தார்.

Source link