பீஹாரின் அடுத்த முதல்வர்… யார்? : சூடுபிடித்தது அரசியல் களம்: அதிருப்தியில் தொண்டர்கள் ஆவேசம்

பாட்னா: பீஹார் அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய முதல்வர் நிதிஷ் குமார், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மனு தாக்கல் செய்ததை அடுத்து அதிருப்தியும், ஆவேசமும் அடைந்த அவரது கட்சி தொண்டர்கள், பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதே சமயம், பீஹார் முதல்வர் பதவியில் அடுத்து அமரப்போவது யார் என்ற கேள்வியால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., அடங்கிய தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த இம்மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது.

எனினும், தே.ஜ., கூட்டணியின் ஒப்பந்தப்படி, முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.

நான்கு மாதங்களே ஆன நிலையில், திடீரென மாநில அரசியலில் இருந்து ஒதுங்கி, தேசிய அரசியலில் கால் பதிக்க நிதிஷ் குமார் முடிவெடுத்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.

இது ஒருபுறம் அவரது ஐக்கிய ஜனதா தள கட்சி தொண்டர்களை அதிர்ச்சியிலும் ஆவேசத்திலும் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம் டில்லிக்கு சென்றாலும், மாநில அரசியலிலும் நிதிஷ் குமார் முழு கவனம் செலுத்துவார் என்ற பேச்சுகள் வலுவாக எழுந்துள்ளன.

குறிப்பாக தே.ஜ., கூட்டணி அரசுக்கு தன் அனுபவங்களை அவர் பகிர்வார் என கூறப்படுகிறது.

மேலும், மாநில அரசியலில் தன் மகனுக்கு வழிவிடும் வகையிலும், அவரை துணை முதல்வர் பொறுப்பில் அமர வைக்கவே, தேசிய அரசியல் பக்கம் நிதிஷ் குமார் கவனத்தை திருப்பி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில், ‘நிதிஷ் குமாரின் இடத்தை அடுத்ததாக நிரப்பப் போவது யார்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.


குஷ்வாஹா சமூகம்

பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் பெயரே, அடுத்த முதல்வருக்கான போட்டியில் வலுவாக அடிபடுகிறது. குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான சவுத்ரி, கட்சி ரீதியாகவும், அரசு ரீதியாகவும் வலுவான செல்வாக்கு படைத்தவராக இருக்கிறார்.

நிதிஷ் குமாருடன் இணைந்து பணியாற்றியதன் மூலம், நிர்வாக ரீதியாக அவருடன் பணியாற்றிய அனுபவங்கள், சவுத்ரிக்கு பெரிதாக கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

அமித் ஷாவின் ஜூனியர்

மத்திய உள்துறை இணையமைச்சராக உள்ள நித்யானந்த் ராய் பெயரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபடுகிறது. நீண்ட காலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அத்துறையில் ஜூனியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தவிர, பீஹாரின் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிக்கே இந்த சமூகத்தின் ஆதரவு அதிகமாக இருக்கிறது.

நித்யானந்த் ராய் முதல்வராக பதவியேற்கும் பட்சத்தில், யாதவ சமூகத்தின் ஆதரவு பா.ஜ., பக்கம் சாய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.

சீமாஞ்சலில் செல்வாக்கு

பீஹார் பா.ஜ.,வின் முன்னாள் மாநில தலைவர் திலீப் ஜெய்ஸ்வாலின் பெயரும் பட்டியலில் உள்ளது. வைஸ்ய சமூகத்தைச் சேர்ந்த இவர், கட்சி ரீதியாக நம்பகமான தலைவராக வலம் வருகிறார்.

பீஹாரின் சீமாஞ்சல் பகுதி மக்களின் ஆதரவை பெற்றவர். குறிப்பாக கிஷன்கஞ்ச் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இவருக்கு செல்வாக்கு அதிகம்.

மாறும் அரசியல்

நான்காவதாக, பாட்னாவின் திஹா தொகுதி எம்.எல்.ஏ.,வான சஞ்சீவ் சவுராசியாவின் பெயரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளது. தலைநகரில் கட்சி ரீதியாக ஆழமான செல்வாக்கு படைத்தவர்.

இவரது தந்தை கங்கா பிரசாத்தும் பா.ஜ.,வில் முக்கிய தலைவராக இருந்தவர்; சிக்கிம் மாநில கவர்னாக பதவி வகித்தவர்.

இப்படி நான்கு பேரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபட்டாலும், இறுதி முடிவை, பா.ஜ.,வின்மத்திய தலைமையே எடுக்கும்.

இந்த முறை, பீஹாரின் முதல்வர் பதவி பா.ஜ., வசம் மாறும். அம்மாநில அரசியலின் போக்கு புது வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளத்தில்

அடிதடி, ரகளை

நிதிஷ் குமார் மாநில அரசியலை விட்டு ஒதுங்க முடிவெடுத்திருப்பதால், அவரது ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் எம்.எல்.ஏ.,க் களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தை தொண்டர்கள் சிலர் ஆவேசத்துடன் அடித்து நொறுக்கிய காட்சிகள், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. இதற்கிடையே, பீஹார் தேர்தலின்போது தான் எச்சரித்த விஷயம் தற்போது உண்மையாகி விட்டது என, காங்., செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்து உள்ளார்.

Source link