பாட்னா: ‘பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், வரும் 14ம் தேதி பதவியை ராஜினாமா செய்வார்’ என, எதிர்பார்க்கப்படுகிறது.
பீஹாரில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை விட, பா.ஜ., அதிக இடங்களை கைப்பற்றியது.
எனினும், முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரே பதவியேற்றுக் கொண்டார். அதே சமயம், பீஹாரில் விரைவில் பா.ஜ., தலைமையில் ஆட்சி அமையும் என்ற பேச்சுகள் எழுந்தன.
அதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், நிதிஷ் குமார் போட்டியிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘எம்.எல்.ஏ., – எம்.எல்.சி., லோக்சபா எம்.பி., என, பல்வேறு பதவிகளை வகித்து விட்டேன். ராஜ்ய சபா எம்.பி.,யாக இதுவரை பதவி வகித்தது இல்லை. அதன் காரணமாகவே டில்லி அரசியலை நோக்கி பயணிக்க உள்ளேன்’ என, நிதிஷ் குமார் காரணம் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், ராஜ்ய சபா எம்.பி.,யாக இன்று அவர் பதவியேற்கிறார். இதற்காக பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து நேற்று அவர் டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இதனால், பீஹார் முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகுவது முடிவாகிவிட்டது.
வரும் 14ம் தேதி அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் முறைப்படி வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், முதல்வர் பதவியை உடனடியாக நிரப்புமாறு பா.ஜ., மேலிடத்திடம் நிதிஷ்குமார் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தற்போதைய துணை முதல்வரும், பா.ஜ.,வின் மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரியை முதல்வராக்க அவர் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கேற்றபடி, வரும் 15ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்க உள்ளதால், 20 ஆண்டுகளுக்கு மேலான அவரது மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது.
