பீஹார் சட்டசபை தேர்தல் செலவு பா.ஜ., அமோகம்; காங்., சோகம்

புதுடில்லி: பீஹாரில், கடந்தாண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், தன் பிரமாண்ட நிதி இருப்பில், 2 சதவீதத்தை மட்டுமே செலவழித்து, 89 தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றி உள்ளது.

காங்கிரசோ, தன் மொத்த நிதி இருப்பில், 28 சதவீதத்தை செலவழித்தும், வெறும் ஆறு தொகுதிகளை வென்றிருக்கிறது.

பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, 2025 நவம்பரில் தேர்தல் நடந்தது. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன.

வெற்றி இதில், பா.ஜ., 89; ஐக்கிய ஜனதா தளம் – 85 தொகுதிகளில் வென்றன.

முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்ற நிலையில், துணை முதல்வர்களாக பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா பதவியேற்றனர். எதிர்க்கட்சியான காங்., வெறும் ஆறு தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது.

பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பின், தேர்தல் செலவு அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளன. அதன்படி, பீஹார் தேர்தலில், பா.ஜ., – 146.71 கோடி; காங்., 35.07 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. தொகை ரீதியாக பா.ஜ., அதிகம் செலவழித்திருந்தாலும், சதவீத அடிப் படையில் பார்த்தால், காங்., ‘ரிஸ்க்’ எடுத்துள்ளது.

பா.ஜ., தன் மொத்த நிதி இருப்பான 7,235.26 கோடி ரூபாயில், வெறும் 2 சதவீதத்தை மட்டுமே செலவிட்டுள்ளது.

தற்போது அக்கட்சியிடம், 7,088.58 கோடி ரூபாய் உள்ளது. காங்., தன் மொத்த நிதி இருப்பான 124.2 கோடி ரூபாயில், 28 சதவீதத்தை செலவிட்டுள்ளது.

அக்கட்சியிடம் தற்போது, 89.13 கோடி ரூபாய் மட்டுமே மிஞ்சியுள்ளது. பா.ஜ., 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி கணக்கிட்டால், அக்கட்சி வெற்றி பெற்ற ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் சராசரியாக, 1.64 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

ஆனால், காங்., வெறும் ஆறு இடங்களில் மட்டுமே வென்றுள்ளதால், அக்கட்சி வெற்றி பெற்ற ஒவ்வொரு எம்.எல்.ஏ-.,வுக்கும் தலா, 5.83 கோடி ரூபாய் செலவானது போன்ற சூழல் உருவாகியுள்ளது.

தேர்தல் செலவு பீஹார் தேர்தலுக்கு பா.ஜ., செலவிட்ட 146 கோடி ரூபாயில், 117 கோடி ரூபாய் நட்சத்திர பேச்சாளர்களின் பயணம் மற்றும் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் பிரசாரத்துக்காக ‘கூகுள் இந்தியா’ நிறுவனத்திற்கு, 14.27 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. வேட்பாளர்களுக்கு நேரடியாக, 29.71 கோடி ரூபாய் நிதியை அக்கட்சி வழங்கியது.

அதேசமயம், காங்.,கின் மொத்த செலவு தொகையான 35.07 கோடி ரூபாயில், 12.83 கோடி ரூபாயை நட்சத்திர பேச்சாளர்களின் பயணத்திற்காகவும், 11.24 கோடி ரூபாயை சமூக ஊடக பிரசாரத்திற்காகவும் செலவிட்டுள்ளது.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின், ‘வாக்காளர் அதிகார யாத்திரை’க்கும் அக்கட்சி செலவிட்டு உள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தேர்தல் செலவு அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

Source link