பீஹார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்… ராஜினாமா? : ராஜ்யசபா எம்.பி.,யாக போவதாக தகவல்

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், 75, அம்மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.பி., ஆனதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், தன் மகன் நிஷாந்த்தை தீவிர அரசியலுக்குள் கொண்டு வந்து துணை முதல்வராக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பீஹார் அரசியல் களம் அனல் பறக்கிறது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு காலியாகும் ஐந்து ராஜ்யசபா இடங்கள் உட்பட, நாடு முழுதும் காலியாகும், 37 இடங்களுக்கு வரும், 16ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

பீஹார் சட்டசபையின் மொத்த பலம், 243. ஆளும் கூட்டணிக்கு, 202 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதன் மூலம், ஐந்து ராஜ்யசபா இடங்களில், நான்கு இடங்கள் இந்த கூட்டணிக்கு கிடைக்கும். காங்., – ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணிக்கு ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லை.

திட்டம்

இந்நிலையில், பீஹார் அரசியலில் திடீர் திருப்பமாக, முதல்வர் நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.பி.,யாக வெற்றி பெற்றதும் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, பாட்னாவில், ஐக்கிய ஜனதா தள தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா, மத்திய அமைச்சர் லாலன் சிங், பீஹார் அமைச்சர் விஜய் சவுத்ரி உள்ளிட்டோருடன், முதல்வர் நிதிஷ் குமார் நேற்று நீண்ட ஆலோசனை நடத்தினார். ராஜ்யசபா தேர்தலில் அவர் போட்டியிடுவது குறித்த அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் நிதிஷ் குமாருக்கு, 50 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ளார். அவரை தீவிர அரசியலுக்குள் கொண்டு வந்து துணை முதல்வராக்க நிதிஷ் குமார் திட்டமிட்டு உள்ளார்.

இதனாலேயே, ராஜ்யசபா எம்.பி.,யாகி தேசிய அரசியலில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் ராஜ்யசபாவுக்கு செல்வாரா அல்லது பீஹார் முதல்வராக தொடர்வாரா என்ற கேள்விகளுக்கு எல்லாம் இன்று மாலைக்குள் விடை தெரிந்து விடும்.

கைப்பாவை

நிதிஷ் குமார் எம்.பி.,யாகி ராஜினாமா செய்ததும், பீஹார் முதல்வர் பதவி பா.ஜ.,வுக்கு கிடைக்கும் என்றும், தற்போது துணை முதல்வர்களாக உள்ள சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் ஆகியோரில் ஒருவர் முதல்வராவர் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் கூறுகையில், ‘பா.ஜ.,வின் கைப்பாவையாக நிதிஷ் குமார் செயல்படுகிறார். அவருக்கு சொந்தமாக யோசிக்கக் கூட தெரியவில்லை. பா.ஜ., எது சொன்னாலும் அப்படியே செய்கிறார். தங்களுக்கு தேவையான வெற்றியை பெற்றவுடன், நிதிஷ் குமாரை பா.ஜ., நேரம் பார்த்து ஓரங்கட்டுகிறது’ என, குற்றஞ்சாட்டினர்.

10 முறை முதல்வராக பதவியேற்றவர் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல், அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 10 முறை பீஹார் முதல்வராக பதவியேற்ற அவர், தேசிய அரசியலில் கவனத்தை திருப்பி உள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இவர் ஏற்கனவே, பீஹார் சட்டசபை, சட்ட மேல்சபை, லோக்சபா உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், நான்கு சபைகளிலும் உறுப்பினராக இருந்த தலைவர்களில் ஒருவராக நிதிஷ் குமார் திகழ்வார். ராஜ்யசபாவுக்கு நிதிஷ் குமா ர் செல்லும் பட்சத்தில், அது பீஹார் அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் அவரது கட்சியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

Source link