புதிதாக 60,000 டவர்களை அமைக்கிறது பி.எஸ்.என்.எல்., அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி

புதுடில்லி: பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தன் நெட்வொர்க்கை விரிவாக்கும் நோக்கில் கூடுதலாக 50,000 முதல் 60,000 தொலை தொடர்பு கோபுரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்ததாவது:

தற்போது பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் 1 லட்சம் டவர்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு தற்சார்பை அடிப்படையாக கொண்ட 4ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். மேலும், கூடுதலாக 50,000 முதல் 60,000 டவர்கள் அமைக்க முயன்று வருகிறோம். நெட்வொர்க்கை விரிவுபடுத்த 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் 4ஜி தொழில்நுட்பம், 5ஜி ஆக தரம் உயர்த்தப்படும். சொந்த தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் இது கடினமான விஷயமாக இருக்காது. கூடுதலாக மொபைல் தளங்களை உருவாக்கி, நெட்வொர்க் மென்பொருள்களில் அப்டேட் செய்தாலே போதுமானது.

கடந்த 2024 ஜூன் நிலவரப்படி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு 8.55 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 9.27 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் காலாண்டு லாபம், 18 ஆண்டுகள் கழித்து 262 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link