தெலுங்கானாவின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரியச் சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ்வின் மகளும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிதா தற்போது ‘தெலுங்கானா ஜாக்ருதி’ என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். ராஷ்டிரியச் சமிதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு, ஜாக்ருதி அமைப்பின் மூலமாக பொதுப்பிரச்னைகளில் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நிஜமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர், பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். மேலும், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில், “ஏப்ரல் 25 அன்று புதிய கட்சியைத் துவங்க உள்ளோம். கட்சியின் துவக்க விழா, ஐதராபாத் பகுதியில் உள்ள முனீராபாத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும்.
இந்த விழாவில் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்யப்படும். இப்போது, தெலுங்கானாவில் மாநிலங்களின் பிரச்சனைகளைக் குறித்துப் பேசுவதற்குப் பிராந்திய கட்சி என்று எதுவும் இல்லை. ஆனால் ஜாக்ருதி, நம் ஒவ்வொரு வீட்டின் கட்சியாக இருக்கும். அதுவே, தெலங்கானாவின் பிராந்திய கட்சியாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, தான் தலைமை வகிக்கும் ஜாக்ருதி அமைப்பினை கட்சியாக மாற்றுவது குறித்து, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் கவிதா ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த கட்சியில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கட்சியின் கொள்கைகள் மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து வரும் ஏப்ரல் 25 அன்று தெரியவரும் என்று தகவல்கள் வெளியாகின்றன.
