புதிய சண்டிகர்: ”நடப்பு சீசனின் புதிய கண்டுபிடிப்பு கொனாலி,” என, பஞ்சாப் அணியின் யுவேந்திர சகால் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் புதிய சண்டிகரில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டியில், பஞ்சாப் அணி (165/7, 19.1 ஓவர்) 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை (162/6, 20 ஓவர்) வீழ்த்தியது. பேட்டிங்கில் அசத்திய பஞ்சாப் அணியின் கூப்பர் கொனாலி, 44 பந்தில் 72* ரன் (5X6, 5X4) விளாசினார். இத்தொடரில் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகனாக ஜொலித்தார் கொனாலி 22.
இதுகுறித்து பஞ்சாப் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சகால் கூறுகையில், ”அறிமுகமான முதல் போட்டியில் அரைசதம் கடந்து அணியை வெற்றி பெறச் செய்தார் கொனாலி. பேட்டிங் வரிசையில் 3வது இடத்தில் களமிறங்கிய இவர், போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார். இவர் விளையாடிய விதம், அவரது முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. எனவே இவர், இந்த சீசனில் புதிய கண்டுபிடிப்பாக விளங்குவார். பொதுவாக மிகப் பெரிய தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டியது அவசியம். இந்த வெற்றி அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்கமாக அமையும்,” என்றார்.
ஷ்ரேயசிற்கு அபராதம்
குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி தாமதமாக பந்துவீசியது. இதனால் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பயிற்சியாளர் விளக்கம்
தோல்வி குறித்து குஜராத் அணியின் பயிற்சியாளர் பார்த்திவ் படேல் கூறுகையில், ”ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இதனால் நிறைய ரன் குவிக்க முடியவில்லை. எங்கள் வீரர்கள் வெற்றியை எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. கடைசி ஓவர் வரை போராடியது மகிழ்ச்சி. சமீபத்தில் முடிந்த ‘டி-20’ உலக கோப்பையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 180 ரன்னை ‘சேஸ்’ செய்ய முடியாமல் ஏமாற்றிய இந்தியா, பைனலில் 250 ரன் குவித்தது. எனவே ஆடுகளத்தின் தன்மை தான் ஒரு அணியின் வெற்றியை தீர்மானிக்கிறது,” என்றார்.
