சென்னை பல்லவன் இல்லத்தில் தலைமைச்செயலகம் கட்டும் முயற்சிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளை தமிழக அரசு எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, அண்ணா சாலையில் பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படவிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மையா?
பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அன்புமணி, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை அரசு கைவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார். ஆனால், பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவு அதைவிட பல மடங்கு தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.
நகரமைப்பு வல்லுனர்களின் கருத்துக்களை கோடிட்டு அறிக்கை
பட்டினப்பாக்கத்தில் அடையாளம் காணப்பட்ட 26.36 ஏக்கரும் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு போதுமானதாக இருக்காது என்பது தான் நகரமைப்பு வல்லுனர்களின் கருத்து ஆகும். அவ்வாறு இருக்கும் போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அடையாளம் காணப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கும், பட்டினப்பாக்கத்தில் அடையாளம் காணப்பட்டதை விட பாதியளவும் மட்டுமே கொண்ட பல்லவன் இல்லத்தில் எவ்வாறு நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகம் கட்ட முடியும்? என்று அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார்.
கூவம் ஆற்றுப்படுகையில் தலைமைச்செயலகமா ?
புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள பல்லவன் இல்லம், கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அங்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், அது சுற்றுச் சூழலை பாதிப்பதுடன், வெள்ள ஆபத்து ஏற்படுவதற்கும் வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, பல்லவன் இல்லத்தின் தெற்கில் அண்ணா சாலை, கிழக்கில் பல்லவன் சாலை, மேற்கில் கூவம் ஆறு, வடக்கில் புனித மேரி போர்வீரர்கள் கல்லறை மற்றும் பாடிகார்ட் முனீஸ்வரர் ஆலயம் ஆகியவை இருப்பதால் எதிர்காலத்தில் புதிய தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தால் கூட அது சாத்தியமாகாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜயின் கனவு – அன்புமணி புது யோசனை
புதிய தலைமைச்செயலக வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். முதலமைச்சரின் கனவு நிறைவேற வேண்டும் என்றால், சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும்
என்றார். முதலில் பட்டினப்பாக்கம், அதற்கு எதிர்ப்பு எழுந்த பின் பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலத்தை அமைக்க திட்டமிடுவதன் மூலம் தமிழ்நாடு அரசு மீண்டும், மீண்டும் தவறு செய்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
