புதிய தொழில் பிரிவு 'நானோ' துவக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை :மிக குறைந்த முதலீட்டில் செயல்படும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உதவ, ‘நானோ’ எனப்படும் புதிய தொழில் பிரிவை துவக்குவது தொடர்பாக, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்துக்கு, அந்த துறையின் கீழ் செயல்படும் வளர்ச்சி அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுதும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களின் முதலீடு, வர்த்தக அளவை பொறுத்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களாக, மத்திய அரசு வகைப் படுத்துகிறது.

அதன்படி, 2.50 கோடி ரூபாய் வரை முதலீடும், 10 கோடி ரூபாய் வரை வர்த்தகமும் இருந்தால் குறுந்தொழில்; 25 கோடி ரூபாய் வரை முதலீடும், 100 கோடி ரூபாய் வர்த்தகமும் உடையவை சிறுதொழில்; 125 கோடி ரூபாய் வரை முதலீடும், 500 கோடி ரூபாய் வரை வர்த்தகமும் இருந்தால், நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவில், நிறுவனங்கள் இடம்பெறுகின்றன.

பல குறுந்தொழில் நிறுவனங்கள், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் துவக்கப் பட்டுள்ளன.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய – மாநில அரசுகளுக்கு வழங்கும் மானியத்துடன் கூடிய கடன் உள்ளிட்ட சலுகைகளை, சிறிய, நடுத்தர நிறுவனங்களே அதிகளவில் பயன்பெறுவதாக, குறுந்தொழில் நடத்துவோர் கூறுகின்றனர்.

எனவே, மிக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்கியவர்களுக்கு உதவ, ‘நானோ’ எனப்படும் புதிய தொழில் பிரிவை துவக்குமாறு மத்திய அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பரிந்துரை இ துகுறித்து, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி கூறியதாவது: குறுந்தொழில் நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெறவே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அளவு, கடந்த ஆண்டில் உயர்த்தப்பட்டது. ‘நானோ’ எனப்படும் புதிய தொழில் பிரிவை துவக்குவது தொடர்பாக, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்துக்கு, பல மாநிலங்களில் செயல்படும் அந்த துறையின் வளர்ச்சி மற்றும் வசதி அலுவலகங்கள் பரிந்துரை செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Source link