பெங்களூரு: டேவிஸ் கோப்பை தொடரில் அசத்திய தக் ஷினேஸ்வர், இந்திய டென்னிசின் புதிய ஹீரோ ஆகியுள்ளார்.
இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதிய டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் பெங்களூருவில் நடந்தது. இதில் இந்தியாவின் ‘நம்பர்-1’ வீரர் சுமித் நாகல், தனது இரண்டு போட்டியிலும் தோற்றார். மறுபக்கம் உலகத் தரவரிசையில் 457 வது இடத்திலுள்ள தமிழகத்தின் தக் ஷினேஸ்வர் (மதுரை), முதல் போட்டியில் ‘நம்பர்-88’ வீரர் ஜெஸ்பெரை வீழ்த்தினார். அடுத்து இரட்டையரில் யூகி பாம்ப்ரியுடன் இணைந்து வென்றார்.
கடைசி, 5வது போட்டியில் தக் ஷினேஸ்வர், 162வது இடத்திலுள்ள கய் டெனை சாய்த்தார். இதையடுத்து 1996க்குப் பின் நெதர்லாந்தை வென்ற இந்தியா (3-2), ‘ரவுண்டு-2’க்கு முன்னேறியது. இதில் இரண்டு ஒற்றையர், ஒரு இரட்டையர் என 3 போட்டியில் வென்ற தக் ஷினேஸ்வர் 25, இந்திய டென்னிசின் புதிய ஹீரோ ஆகியுள்ளார்.
டேவிஸ் கோப்பை டென்னிசில், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார்.
இவரது தந்தை சுரேஷ் எக்கா, கிளப் அளவிலான வீரராக இருந்துள்ளார். தனது மகனின் திறமையை கண்டறிந்து, 9 வயதில் சென்னையில் உள்ள பயிற்சியாளர் லக் ஷ்மண் சக்ரவர்த்தியிடம் கொண்டு வந்தார்.
சோம்தேவ் ஆலோசனை
கடந்த 2010-16 வரை தினமும் 16 கி.மீ., பயணம் செய்து பயிற்சியில் ஈடுபட்டார். போதிய ஸ்பான்சர் இல்லாத நிலையில், 2019ல் முதுகு காயத்தால் 6 மாதம், அடுத்து கொரோனா பரவல் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டார்.
பின் இந்திய அணி முன்னாள் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ‘அட்வைஸ்’ படி, அமெரிக்கா சென்ற தக் ஷினேஸ்வர், வேக் பாரஸ் பல்கலையில் இணைந்து பயிற்சியை தொடர்ந்தார்.
அதிக உயரம்
6 அடி, 6 அங்குலம் என்ற இவரது உயரம், மின்னல் வேகத்தில் சர்வீஸ் செய்ய கைகொடுக்கிறது. டேவிஸ் கோப்பை டென்னிசில், 33 ‘ஏஸ்’ புள்ளி எடுத்து, சாதித்துள்ளார்.
தக் ஷினேஸ்வர் கூறுகையில்,” எனது உயரத்தை, பலமாக பயன்படுத்திக் கொள்கிறேன். முக்கிய தருணத்தில் மின்னல் வேகத்தில் பந்தை அடித்து (‘ஏஸ்’ முறை), நேரடியாக புள்ளி எடுக்க முயற்சிப்பேன். வரும் மே மாதம் அமெரிக்காவில் படிப்பு முடிந்ததும், பல்வேறு தொடர்களில் பங்கேற்க முயற்சிப்பேன்,” என்றார்.
